புதன், 26 ஆகஸ்ட், 2015

மீன்களை வாங்க வியாபாரிகள் மறுப்பு;வத்தகரை மீன்பிடி இறங்கு தளத்தில் பரபரப்பு

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் (வத்தகரை) மீன்பிடி இறங்கு தளத்தில் மீன்களை வாங்க போதுமான இடவசதி இல்லையெனக்கூறி, வியாபாரிகள் மீன்களை வாங்க மறுத்ததால் பரபரப்பு நிலவியது.
கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை   (வத்தகரை) அன்னங்கோவிலில் மீன்பிடி இறங்குதளம் உள்ளது. இங்கு படகுகள் நிறுத்தவும், கடலில் இருந்து பிடித்து கொண்டு வரப்படும் மீன்களை வியாபாரிகள் வாங்குவதற்காகவும் மீன் வளத்துறை

அதிகாரிகள், படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் மீன் வியாபாரிகள் சங்கத்தினருக்கு என தனித் தனியாக இடம் ஒதுக்கிக் கொடுத்துள்ளனர். இந்நிலையில், நேற்று மீன் வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் படகுகள் வரிசையாக கட்டப்பட்டதால், மீன்களை வாங்க போதுமான இடவசதி இல்லை எனக் கூறி, மீன் வியாபாரிகள் நேற்று விற்பனைக்கு வந்த மீன்களை வாங்கவில்லை.

இதனால் விற்பனைக்கு கடலில் இருந்து 50க்கும் மேற்பட்ட படகுகளில் கொண்டு வரப்பட்ட 50 டன் மத்தி மீன்கள் சீர்காழி அடுத்த பழையாறு மீன்பிடி தளத்திற்கு விற்பனை செய்ய கொண்டு செல்லப்பட்டது. விற்பனைக்கு வந்த மீன்கள் கொண்டு செல்லப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து மீன் வியாபாரி சங்கத் தலைவர் சிவக்குமார் கூறுகையில், 'மீன் வளத்துறை அதிகாரிகள், மீன்பிடி இறங்கு தளத்தில் படகுகள் உரிமையாளர் சங்கத்திற்கும், மீன் வியாபாரிகள் சங்கத்திற்கும் தனியாக இடம் ஒதுக்கிக் கொடுத்தனர். இதனால் மீன்கள் சுகாதாரமாக வெளி மாநிலங்களுக்கு தினமும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் படகுகள் கட்டப்பட்டதால் மீன்கள் வாங்க போதுமான இடவசதி இல்லாததால் நேற்று மீன்கள் வாங்க முடியவில்லை. அதிகாரிகள் ஒதுக்கிக் கொடுத்துள்ள இடத்தில் கட்டப்பட்டுள்ள படகுகளை அகற்றித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் செய்துள்ளோம்' என்றார்.

வியாபாரிகள் மீன்களை வெளி மாநிலங்களுக்கு அனுப்பாததால் அன்னங்கோவில் மீனபிடி இறங்குதளம் வெறிச்சோடி காணப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக