பரங்கிப்பேட்டை வரலாற்று தொகுப்பு

பரங்கிப்பேட்டை (ஆங்கிலம்:Parangipettai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்
இவ்வூர் மஹ்மூதுபந்தர், போர்டோநோவோ (புதிய துறைமுக நகரம்) மற்றும் முத்து கிருஷ்ணபுரி என்றும் அறியப்படுகிறது. வங்காள வளைகுடா கடலோரத்தில் அமைந்துள்ள இவ்வூர் போர்ச்சுகீசியர்கள் மற்றும் பிரிட்டிசாரால் காலனி ஆதிக்கத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இது முக்கிய கப்பல் துறைமுகமாகவும் விளங்கியது. ஆசியாவின் முதல் இரும்பு தொழிற்சாலை இங்கு நிறுவப்பட்டிருந்தது.
கி.பி. 1781ல் ஆங்கிலேயரை எதிர்த்து ஹைதர் அலி இரண்டாம் மைசூர் போர் புரிந்தார். அதன் நினைவு போர்கொடி கம்பமும், கல்லறைகளும் இன்றும் அழியாச் சின்னங்களாக உள்ளது.
இங்கு கடல்சார் கல்வியான அண்ணாமலை பல்கலைகழகத்தினால் நிறுவப்பட்டு ஆராய்ச்சி படிப்புகள் நடைபெற்று வருகின்றது - இதின் கடல்சார் அருங்காட்சியகம் இங்கு பிரசித்தி பெற்றது.
இரயில் நிலையம்: விழுப்புரம் - மயிலாடுதுறை கோட்ட பாதையின் இடையே அமைந்துள்ளது. சிதம்பரம் இரயில் நிலையம் இங்கிருந்து 11 கி.மீ தூரத்திலும், கடலூ சந்திப்பு 28 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.

சில குறிப்புகள்
பரங்கிப்பேட்டை இப்னு ஹம்துன் கட்டுரையிலிருந்து....

தாய்நாட்டு அந்நியர்களின் வாழ்வியல் சந்தையான இவ்வூருக்கான பெயர் நியாயத்துக்கு, ‘தூக்கம் கெட்டுவிடுமோ’ என்ற கவலையால் தொடர்வண்டி நிலையத்தைத் தள்ளிவைக்கச் சொன்னதாகச் சொல்லப்படும் முன்னோர்களின் ஈசா,மூசா(கர்ணப்பரம்பரைக்)கதைகள் போதாமையாக இருந்தாலும், தமிழில் பேட்டை என்றால் சந்தை; பரங்கிப்பேட்டை என்பதன் பொருள் ‘அந்நியர் (வெள்ளையர்)களின் சந்தை’யே. ஒருவகையில் அப்போது நாடு இருந்த நிலையின் குறியீட்டுப் பெயர் எனலாம். அதாவது, அன்றைக்கு இந்தியாவே ஒரு ‘பரங்கியர் பேட்டை’ தான்.
சோழமண்டலக் கடற்கரையில், வெள்ளாற்றின் வடகரையில், போர்ட்டோ நோவோ (புதிய /அறியப்படாத துறைமுகம்) என்கிற வரலாற்றுப் பெயரிலிருக்கும் இவ்வூர் டச்சுக்காரர்கள், போர்த்துக்கீசியர்கள், ஃபிரெஞ்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள் என்ற பல ‘பரங்கியர்’களின் பேட்டையாக இருந்து வந்ததாக சரித்திரம் சான்று பகர்கின்றது. இன்றளவும் போர்ட்டோநோவோ என்கிற பெயர் தொடர்வண்டி நிலையத்திலும், வங்கிகளிலும் புழக்கத்திலுள்ளது.
தமிழகத்தின் முதல் முஸ்லிம் குடியேற்றங்கள் நிகழ்ந்த நான்கு ஊர்களுள் பரங்கிப்பேட்டையும் ஒன்று என்று பழவேற்காட்டில் கிடைத்த கல்வெட்டு ஆதாரங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றனவனாம்.
போர்ட்டோநோவோ என்கிற பெயருக்கு மிக மிக முன்னதாகவே இவ்வூர் ”மஹ்மூதுபந்தர்” (மஹ்மூதுநபிகளின் துறைமுகம்) என்ற சிறப்புப்பெயரால் வழங்கப்பட்டுவந்தது.
சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் கூடத் துறைமுகப்பட்டினம் என்பதைத் குறிக்க பந்தர் என்ற சொல்லாட்சி பயன்படுத்தப்பட்டுள்ளது.
     கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு
     பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்
என்றும் வரும் தொடர்கள் பந்தர் என்பது துறைமுகப்பட்டினம் என்பதை குறித்து நிற்கக் காணலாம் (நன்றி: தமிழ்ப்பேராசிரியர் சா. அப்துல்ஹமீது).
மேலும், கி.பி. எட்டாம் நூற்றாண்டிலேயே முஸ்லிம்கள் இங்கு நல்ல வண்ணம் வாழ்ந்திருந்தனர். மாணிக்கவாசகர் தான் அருளிய திருவாசகத்தின் அன்னைப்பத்தில் வெண்மையான ஆடையுடுத்தி மொட்டையடித்த வெண்மேனியராய்க் கழுத்து முதல் கால்வரை நீண்ட குப்பாயமெனும் அங்கியினை அணிந்தவராகப் பள்ளி செல்லும் முஸ்லிம்களின் தோற்றத்தில் சிவபெருமான் வந்து தன்னை ஆட்கொண்டதாகக் கூறுகிறார். அப்பாடல்
     வெள்ளக் கலிங்கத்தர் வெண்திரு முண்டத்தர்
     பள்ளிக் குப்பாயத்தர் அன்னே
என்பதைச் சுட்டுகிறார் பேராசிரியர் சா.அப்துல்ஹமீது).
நாயக்கர் காலத்தில் முத்துகிருஷ்ணபுரி என்றும் அழைக்கப்பட்ட இவ்வூருக்கு வருணபுரி என்றும் ஒரு பூர்வாங்கப் பேருண்டாம். வருணம் என்றால் மழை. ஒவ்வொரு பருவமழைக்காலத்திலும் வட்டாரத்தில் அதிக அளவு வானத்துமழையைப் பெறுகிற இவ்வூர், அருகிலுள்ள (சிதம்பரம், கடலூர்)நகரங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு வானிலைச் செய்திகளில் முன்னிலை பெறுவதன் மர்மம் இதுவாயிருக்கலாம்.
18ஆம் நூற்றாண்டின் இறுதியில் (1781) மைசூர்வேங்கை ஹைதர் அலீக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே நடைபெற்ற போரில், ஹைதரை வீழ்த்தி வெள்ளையர் வலுவாகக் காலூன்றியதை ஞாபகப்படுத்தும் ஒரு ‘ஹைதர்’காலத்து நினைவுத்தூணும் இங்குண்டு.
அக்காலத்தில் ஒரு செழிப்பான துறைமுகமாகத் திகழ்ந்த இவ்வூர், சிறந்த வணிகத்தளமாகவும், தொழிற்மையமாகவும் விளங்கியிருக்கிறது. இவ்வூரின் (அப்போதைய) இரும்பாலையிலிருந்து இரும்புகள் பிரிட்டனுக்கும், தென்கிழக்காசிய நாடுகளுக்கும் ஏற்றுமதியாகியுள்ளன.
மராட்டியப் படையெடுப்பால் இந்தத் துறைமுகம் அழிவுபட்டதையும் அதன் பின்னர் அருகிலுள்ள கடலூர் துறைமுகம் மெல்ல வணிகச் சிறப்பு அடைந்ததையும் தன் குறிப்பேடுகளில் குறித்துள்ளார் ஸ்காட்லாந்தின் அலெக்சாண்டார் ஹாமில்டன்.*
ஆற்காடு நவாப் அமைத்த தங்கச்சாலையில் செய்யப்பட்ட தங்கநாணயங்கள் ‘போர்ட்டோநோவோ பகோடா’ (Porto Novo Pagoda) என்றே அழைக்கப்பட்டன. ஏறத்தாழ 8 ஷில்லிங்குக்குச் சமமாயிருந்ததாம் ஒரு போர்ட்டோநோவோ பகோடா. பின்னர், இந்த பகோடா மாதிரியைப் பின்பற்றியே ஆங்கிலேயர்கள் நாகப்பட்டினம் பகோடாவையும், டச்சுக்காரர்கள் தூத்துக்குடி, கொழும்பு பகோடாக்களையும் செய்தனராம். இன்னமும் சிங்களமொழியில் இதற்கு ‘பரங்கிப்பட்ட’ என்றுதான் பெயராமே?! (யாராவது உறுதிப்படுத்துங்கள்).
காந்தியச் சிந்தனைகளால் கவரப்பட்ட ஐரோப்பிய சீடர் ஒருவரால் தொடங்கப்பட்ட சேவாசதன், இன்று சேவாமந்திர் மேல்நிலைப்பள்ளியாக கல்விச்சேவையில் காந்தியத்தையும் கிறித்தவத்தையும் நினைவு கூர்ந்து வருகிறது. இதன் பொருட்டே காந்தியடிகள் இவ்வூருக்கு வருகை புரிந்திருந்தார்.


இந்தியாவின் முதல் கடல்சார் உயிரியல் உயர் ஆராய்ச்சி மையம் (Marine Biological Station) இங்கே தான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தாரால் அமைக்கப்பட்டுள்ளது.
அரபு எழுத்துகளை ஆடையாக அணிந்திருந்ததால் பதிமூணு கோடி திர்ஹமுக்கு விலை பேசப்பட்ட அண்மை துபாய் மீனுக்கு அண்ணனான ஒரு மீன் இங்கே அருங்காட்சியகத்தில் உண்டு. இதுபற்றி The Hindu செய்தி வெளியிட்டிருக்கிறது. 2001 ஆண்டு கணக்கெடுப்பின் படி இருபதினாயிரத்துக்கும் அதிகமான மக்களைக் கொண்டுள்ள இவ்வூரின் கல்வியறிவில் தேசிய சராசரி(55%)யினும் மிகவும் உயர்ந்தே(75%)இருந்தாலும், பெண்கள் கல்வியறிவு விழுக்காடு 69% என்ற அளவிலேயே இருக்கிறது. ‘பரங்கிப்பேட்டை’யின் பெரும்பாலான மண்ணின் மைந்தர்கள் லாவோஸ், புருணை, இந்தோநேசியா, மலேயா, சிங்கப்பூர், அரபு நாடுகள் என்று ‘அந்நிய சந்தை’களில் தான் பணியாற்றி வந்தனர்/வருகின்றனர். குறிப்பிடத்தக்க சிறு அளவினர் கடற்வணிகத்திலும் ஈடுபடுகின்றனர். (Merchant Navy).
பன்னிரு பள்ளிவாசல்களைக் கொண்ட இவ்வூரில், முஹம்மது நபி(ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரான உக்காஷா (ரலி) அவர்களின் அடக்கத்தலமும் உள்ளதாகக் கூறப்பட்டாலும், இதற்கு முறையான இஸ்லாமிய மரபு (ஹதீஸ்/வரலாறு)ஆதாரங்கள் காணக்கிடைக்கவில்லை.
எனினும், பேரா.சா.அப்துல்ஹமீது இது பற்றி கூறுகையில், நபிமணித் தோழர்களான ஹழரத் உக்காஷா (ரலி) மஹ்மூது பந்தர் என்னும் பரங்கிப்பேட்டையிலும், ஹழரத் தமீமுல் அன்சாரி (ரலி) சென்னையை அடுத்த கோவளத்திலும், ஹழரத் வஹப் (ரலி) சீனத் துறைமுகமான காண்டன் நகரத்திலும் நல்லடக்கம் பெற்றுள்ளனர். இச்செய்தி மௌலானா அக்பர்ஷாஹ்கான் நஜீப் ஆபாதி எழுதிய ஆயினயே ஹகீகத்துன் நாமா (உண்மையான வரலாற்றுக் கண்ணாடி) எனும் உருது நூலில் (பக். 4748) குறிக்கப்பட்டுள்ளது. இந்நூல் பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த நஃபீஸ் அகாடமியால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ‘Saints of India’ (இந்தியாவின் துறவிகள்) எனும் ஆங்கில நூலிலும் (ப. 137) இவ்விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியிலும் இது குறித்த நூல்கள் உள்ளதாகத் தெரிய வருகிறது. நபிமணித் தோழராகிய உக்காஷா (ரலி) அவர்களின் கல்லறை மஹ்மூது பந்தர் எனப்படும் பரங்கிப்பேட்டையில் இருப்பதால் இவ்வூரில் கி.பி ஏழாம் நூற்றாண்டிலேயே முஸ்லிம்கள் குடியேறிவிட்டனர் என்பது புலனாகும். என்கிறார்.
அக்பர்ஷாஹ் கான் நஜீப்ஆபாதி அவர்கள் தாருஸ்ஸலாம் போன்ற வரலாற்றுப் பதிப்பகங்களால் அங்கிகரிக்கப்பட்ட சிறந்த வரலாற்றாய்வாளார் என்கிறார் இலக்கியப்புரவலர் ஹூசைனுல் ஆபிதீன்.
இஃதன்றி, குறிப்பிடத்தக்க ஹிந்து கோயில்களாக முருகனுக்குரிய ‘குமரன்கோயிலும், ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்ததாகச் சொல்லப்படும் பெரிய சிவன் கோயிலும் உள்ளன. சித்திரகுப்தன், சூரியன், வருணன் ஆகியோர் தவமிருந்ததாகக் கூறப்படும் இச்சிவன் கோயில் சைவக்கிரந்தங்களில் ‘திருவருணமான்மியம்’ என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதாம்.ஆதிமூலேசுவரர் கோயில் என்றும் அழைக்கப்படும் இக்கோயிலை வைத்து இவ்வூருக்கு ஆதிமூலேசுவரம் என்ற பெயரும் சொல்லப்படுகிறது. காஞ்சிப் பெரியவர் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் தம் இளமைக் காலத்தில் இங்கு வழிபட்டாராம்.(ஆதாரம்: தினமலர் நாளிதழ் 18 07 2003 சென்னை பதிப்பு. ப : 18)
கி.மு.203ல் பிறந்ததாகச் சொல்லப்படும் பாபாஜி நாகராஜ் கோயிலும் உண்டு.(’பாபா’ படத்தின் முதற்காட்சி).
சீறாப்புராணம், சீதக்காதிக்கு பின் வந்த கொடை வள்ளல் அபுல்காசீம் மரைக்காயர், என்று இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களோடும்/இலக்கியர்களோடும் இவ்வூரின் சம்பந்தம்; சர்ச்சைகள் பற்றி பிறிதொரு தருணம் பேசலாம் என்று எண்ணினாலும் சில சிறு குறிப்புகள்:
சீறாப்புராணம் அரங்கேறியது பரங்கிப்பேட்டையில் அன்று; கீழக்கரையில் தானென்று தமிழிலக்கிய உலகில் கருத்தொன்று உண்டு எனினும் முழுமை பெறாத அக்காப்பியம் அரங்கேறியிருக்க வாய்ப்பில்லை என்பதே பெரும்பாலான பரங்கிப்பேட்டையர்களின் கருத்து.
சீறாப்புராணத்தின் கையெழுத்துப்பிரதி இன்றும் பரங்கிப்பேட்டை பேராசிரியர் ஒருவரிடம் காணக் கிடைப்பது (நானே கண்டுள்ளேன்) இவ்வூருக்கும் சீறாப்புராணத்துக்கும் உள்ள தொடர்பை விளக்கப் போதுமானது.
மேலும், சீறாப்புராணத்துக்கு எதிரெதிர் உரையெழுதிப் புகழ் பெற்றவர்களில் நாகூர் குலாம் காதிறு நாவலருடன் இவ்வூர் பெரும்புலவர் காதிர்ஹசனா மரைக்காயர் என்பாரும் காலத்திலும் திறனிலும் சமமானவர்கள்.
இருங்கள், இவ்வூரின் சின்னஞ்சிறுகவிஞர் ஒருவரின் வெண்பாவோடு முடித்துக்கொள்வோம்:

              பெருமை மணக்கும் பரங்கியர் பேட்டை
              பெருங்காய வாடை  பரப்ப - பெரிதாகப்
              பேசிய பேச்சினில் பெற்றது மென்னவோ
              வாசித்(து) இடுவீர் வழக்கு!
                   கடல் ஆய்வு மையம்

பரங்கிப்பேட்டை கடல்வளம் நிறைந்த பகுதி.இங்கு கடற்கரை கழிமுகம், சதுப்புநிலம் 
ஆறு நீரோடைகள் அனைத்தும் காணப்படுகின்றன. இந்த ஊரை கடல் ஆராய்ச்சிக்காக 
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் விலங்கியல் துறையினர் தேர்ந்தெடுத்து 
கடல் உயிரின ஆய்வு மையம் (Marine Biological Station) ஒன்றினை நிறுவினர்.

இந்த மையத்தில், கடல் உயிரினங்கள் பற்றிய ஓர் அருங்காட்சியகம் இருக்கிறது. இதனைக் காண ஏராளமான பொதுமக்கள், மணவர்கள், சுற்றுலாப்பயணிகள் தினமும் வருகின்றனர். ஓரு கோடி ரூபாய்க்கும் மேலான மதிப்புள்ள 10,000 புத்தகங்கள் மற்றும் ஆராய்ச்சி தொகுப்புகள் அடங்கிய ஒரு நூலகமும் இங்கு இருக்கிறது. ஆய்வுக்காக ஒரு கப்பல் மற்றும் நான்கு படகுகளும் உள்ளன.
பரங்கிப்பேட்டையின் (Marine Biological Station) மரைன் பயாலாஜிக்கள் ஸ்டேஷன் தான் இந்தியாவின் கடல் உயிரின ஆய்வுக்காகத் தொடங்கப்பட்ட முதல் ஆய்வு நிலையம் என்பது குறிப்பித்தக்கது.

2 கருத்துகள்: