புதன், 5 ஆகஸ்ட், 2015

மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி மாவட்டம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைப்பு

கடலூர்:தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என வலியுறுத்தி ம.தி.மு.க., - வி.சி., மனித நேய மக்கள் கட்சிகள் நேற்று ஒரு நாள் "பந்த்' நடத்த அழைப்பு விடுத்தன.
இதற்கு தி மு  க ,தே.மு.தி.க., - காங்., - கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன
டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி கடலூர் மாவட்டம் முழுவதிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சாலைமறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட, போராட்டத்தில் ஈடுபட முயன்ற 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

 பூரண மதுவிலக்கு கோரி போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் மரணம் அடைந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி மாணவர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் பூரணமதுவிலக்கை அமல்படுத்தக்கோரி வேலை நிறுத்தபோராட்டத்துக்கு ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை அழைப்பு விடுத்து இருந்தன. அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடையடைப்பு, சாலை மறியல் மற்றும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டத்திலும் போராட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் தலைநகரான கடலூரில் நேற்று காலையில் ஒரு சில கடைகளை தவிர பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. நகரின் முக்கிய வர்த்தக தலமாக விளங்கும் லாரன்ஸ் சாலையிலும் நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள், பாத்திரக்கடைகள் ஆகிய கடைகள் மூடப்பட்டிருந்தன.

அதேபோல மஞ்சக்குப்பம், கடலூர் முதுநகர் பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சில வியாபாரிகள் கடையின் கதவை பாதி அளவு திறந்து வைத்தபடி வியாபாரம் செய்ததை காண முடிந்தது. ஆனால் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இல்லாததால் காலை 10 மணிக்கு பிறகு கடைகள் படிப்படியாக திறக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

பஸ்-ஆட்டோக்கள் ஓடின

கடையடைப்பு போராட்டம் ஓரளவு நடைபெற்றாலும் வாகன போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. கடலூரில் அதிகாலையில் இருந்தே பஸ், ஆட்டோ, லாரி போன்ற வாகனங்கள் வழக்கம்போல ஓடின. பஸ்நிலையத்துக்கு வரவேண்டிய உள்ளூர் மற்றும் வெளியூர் பஸ்கள் வந்து சென்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.



 மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் தாமரைச்செல்வன் தலைமையில் கடலூர் தபால் நிலையம் முன்பு திடீர் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் கடலூர்-நெல்லிக்குப்பம் மார்க்கத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதை அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் போலீசார் விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 26 பேரை கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.


மாணவர்கள் போராட்டம்

பூரண மதுவிலக்கு கோரி கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களை போராட்டத்துக்கு அழைத்ததாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை சேர்ந்த பார்த்தசாரதி(20) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதன் பின்னர் 4 மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது மதுக்கடையை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள்.

சென்னையில் மதுவிலக்கு கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.


இதேபோல் நெய்வேலி மந்தாரக்குப்பம் காட்டுமன்னார்கோவில்,  குமராட்சி, வேப்பூர், சிதம்பரம், பரங்கிப்பேட்டை குறிஞ்சிப்பாடி நெல்லிக்குப்பம் பகுதியில் பெரும்பலனா கடைகள் . அடைக்கப்பட்டிருந்தன.டாஸ்மாக்கடைகள் மட்டும் போலீசார் பாதுகாப்புடன் இயங்கியது.

பரங்கிப்பேட்டை

மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கடையடைப்புப் போராட்டத்தின் ஒரு பகுதியாக பரங்கிப்பேட்டை பெரும்பலனா கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பெரியகடை தெரு சின்னக்கடை தெரு  கச்சேரி தெரு சந்திப்பு கிரைக்கரா தெரு உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பலனா கடைகள் அடைக்கப்பட்டிருந்தன


முழு கடைஅடைப்பு போராட்டத்தின் போது எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் இருப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அதன்படி மாவட்டத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகள் மற்றும் பஸ்டெப்போக்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாவட்டம் முழுவதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 46 பேர் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட 54 பேர் என மொத்தம் 100 பேரை கைது செய்துள்ளதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக