புதன், 26 ஆகஸ்ட், 2015

விவசாயத்தை பார்ப்பதா... போராடுவதா? - டெல்டா விவசாயிகளை அல்லாட வைக்கும் ஷேல் கேஸ் எமன்!

மீத்தேன் என்னும் எமனின் பிடியிலிருந்து தற்போதுதான் தற்காலிகமாக மீண்டது தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள். அதற்குள் அடுத்த பேராபத்து, டெல்டா மாவட்ட மக்களை நெருங்குகிறது. ஆம் டெல்டாவை பாழ்படுத்தும் புதிய திட்டமாக தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளது பாறை எரிவாயு (ஷேல் கேஸ்) திட்டம்.


ஷேல் கேஸ்- டெல்டா மக்களை மிரட்டும் மற்றொரு எமன்

இந்த திட்டத்தினால் டெல்டா பகுதிகள் முழுவதும் பாலைவனமாவதோடு, சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படும் ஆபத்துள்ளதாக
சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

கடந்த 25 ஆண்டுகளாக ஓ.என்.ஜி.சி நிறுவனம், டெல்டா மாவட்டங்களில் கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. காவிரிப் படுகையில் அதிகம் அளவில் காணப்படும் மீத்தேன் வாயுவை எடுக்க, கடந்த ஆட்சியில் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. இதனால் ஏற்படும் பாதிப்பை அறிந்து அனைத்து கட்சியினரும், விவசாயிகளும் ஒன்று திரண்டு, மீத்தேன் திட்டத்திற்கு எதிராக  போராடினார். பல்வேறு சட்ட போராட்டங்கள் நடத்தினர்கள். இதன் விளைவாக மீத்தேன் எடுப்பதற்கு தற்காலிக தடை விதித்துள்ளது பசுமை தீர்பாயம்.
மீத்தேன் முயற்சி தற்காலிகமாக முறியடிக்கப்பட்ட நிலையில், டெல்டாவின் மீது புதிதாக பாறை எரிவாயு என்கிற அம்பு எறியப்பட்டுள்ளது.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் 9 இடங்கள் உள்பட இந்தியாவில் 56 இடங்களில் பாறை எரிவாயு எடுப்பதற்கு ஓ.என்.ஜி.சி க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாறை எரிவாயு மற்றும் பாறை  எண்ணெய்  எடுப்பதற்கு அனுமதி கேட்டு, சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு  ஓ.என்.ஜி.சி., 29.06.2015 அன்று கடிதம் அனுப்பியது. மத்திய அரசும் அனுமதி கொடுப்பதற்கு தீவிர பரிசீலனையில் ஈடுபட்டு வருகிறது. விவசாயிகளின் நண்பன் என்று சொல்லிக்கொண்டு, விவசாயிகளுக்கு பாதமான முடிவினை எடுக்க ஆலோசித்து வருகிறது மத்திய அரசு.

பாறை எரிவாயு- அப்படி என்றால்...?

இயற்கை எரிவாயு என்பது மீத்தேன், ஈத்தேன், ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு, புளூட்டேன், நைட்ரஜன், ஹைட்ரஜன் மற்றும் வாயுக்கள் கலந்த கலவையாகும். ஷேல் என்பது பல அடுக்குகளை கொண்ட மென்மையான கற்கள் அல்லது எளிதில் பிளவுபடக்கூடிய கற்கள். பூமியிலிருந்து 10,000 அடி ஆழத்தில் இந்த கற்கள் காணப்படுகின்றன.

மீத்தேனுக்கும், பாறை எரிவாயுவிற்கும் பெரிய வித்தியாசங்கள் ஒன்றுமில்லை. சொல்லப்போனால் மீத்தேனை விட பல்லாயிரம் மடங்கு அதிக பாதிப்புகளை உருவாக்கக் கூடியது. இந்த திட்டத்தை கொண்டு வருவதால் அரசுக்கு பல்லாயிரம் கோடி வருமானம் கிடைக்குமாம். ஆனால் மக்களுக்கு?

பாதிப்புகளுக்கு யார் பொறுப்பு ?


பாறை எரிவாயு எவ்வாறு பிரித்தெடுக்கப்படுகிறது? மித்தேன் வாயுவை பிரித்தெடுப்பதற்கு 500 அடி முதல் 1000 அடி வரை துளையிட்டு, அதில் பக்கவாட்டில்100 அடி வரை துளையிட்டு, 600-க்கு மேற்பட்ட வேதிப்பொருட்களை நீருடன் கலந்து அதிக அழுத்தத்தில் செலுத்தும்போது, அது பூமியை துளைத்து அதிலிருந்து மீத்தேன் வாயுவை வெளிக்கொண்டு வரும். இதுவே இப்படி என்றால், பாறை எரிவாயு பிரித்தெடுக்கும் முறை இதைவிட பயங்கரம்.
இந்த பாறை எரிவாயு எடுப்பதற்கு நீரழுத்த பிளவு (hydralic process) முறை பயன்படுத்தப்படுகிறது. இதன்படி பூமிக்கடியில் கிட்டத்தட்ட 10,000 முதல் 20,000 அடி ஆழம் வரை துளையிட்டு, அதன் பக்கவாட்டில் 1 கி.மீ. வரை துளையிட்டு, அதில் 600க்கும் மேற்பட்ட வேதிப்பொருட்களை, மணலுடன் நீரையும் சேர்த்து, அதிக அழுத்தத்தில் செலுத்தி பாறை எரிவாயு வெளிக்கொண்டு வரப்படுகிறது.

உள்ளே செலுத்தப்படுகின்ற வேதிக்கரைசல்கள் வெளிக்கொண்டு வரப்பட்டு, மேல்மட்ட நீரில் கழிவுகளாக கலந்து விடப்படுகிறது. இப்படி கலந்து விடப்படும் நீர் வேளாண் விளை நிலங்களிலும், ஆறுகளிலும்தான் கலக்கும்.

இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதோடு, நீருடன் காற்றும் மாசுபட்டு,  டெல்டா காவிரி படுகையே பாழாகி, இப்பகுதி மக்களுக்கு புற்றுநோய் உள்பட பல்வேறு நோய்களை உருவாக்கும் அபாயம் உள்ளது. இந்த கழிவு நீர் கலப்பதால், தமிழகத்தின் மற்றுமோர் கூவமாக மாறக்கூடிய அபாயத்தில் காவிரி உள்ளது.
மிகப்பெரிய அபாயம் 

இத்திட்டத்தினால் தஞ்சை, நாகை, கடலூர், திருவாரூர், அரியலூர், உள்ளிட்ட மாவட்ட மக்கள் பாதிக்கப்படுவதுடன், 19 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது

இந்த பாறை எரிவாயு என்பது வளைகுடா நாடுகளிலும், ஒன்றுக்கும் உத வாத தரிசு நிலங்களில் எடுக்கப்படுவது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் அறிந்து பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 9 நாடுகள் இத்திட்டத்திற்கு தடை விதித்துள்ளன.

இந்நிலையில் டெல்டாவை பாலைவனமாக்கும் இந்த திட்டத்தை கொண்டு வரக் கூடாது என்று பல்வேறு தரப்பினரும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். தமிழகத்தின் உணவு உற்பத்தியில் 9% டெல்டா பகுதியில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே விவசாயத்தை பாழ்படுத்தும் டெல்டாவை பாலைவனமாக்கும் இத்திட்டத்திற்கு எதிராக தமிழக அரசும் குரல் கொடுக்க வேண்டும்.

விவசாயிகள் விவசாயம் செய்வதை விட,  விவசாயத்திற்கு எதிராக கொண்டு வரப்படும் திட்டத்திற்கு எதிராக போராடுவதற்கே நேரம் சரியாக உள்ளது.  எனவே மத்திய அரசும் விவசாயிகளின் நலன் கருதி  இத்திட்டத்தை தடை செய்ய வேண்டும் என்பதே விவசாயிகள் மட்டுமல்ல; தமிழர்கள் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
செவிமடுக்குமா அரசுகள்?

த. எழிலரசன்
source:விகடன் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக