செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

கடலூர் மாவட்டத்தில் அரிசி விலை குறைகிறது! ஆந்திர மாநில அரிசி வரத்து எதிரொலி!

கடலூர் : ஆந்திர மாநில அரிசி வரத்து அதிகரித்து வருவதால் மோட்டா ரக அரிசி விலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்து வருகிறது.

தமிழகத்தில் ஆகஸ்ட் மாதத்தில் சம்பா நெல் நாற்று விடும் பருவம் துவங்கியுள்ளது. ஏற்கனவே குறுவை பட்டத்தில் நடவு செய்துள்ள நெல் இம்மாத இறுதியில் அறுவடை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நெல் வரத்து இல்லாத இந்த இடைப்பட்ட நாட்களில் அரிசி விலை எப்போதும் உயர்ந்து இருக்கும்.ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக அரிசி விலை குறைந்து வருகிறது.

ஆந்திர மாநிலத்தில் தேவையை விட அதிகளவு நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த அரிசியை வழக்கமாக
கொள்முதல் செய்யும் மத்திய அரசு தற்போது கொள்முதல் செய்வதற்கு ஆர்வம் காட்டாமல் உள்ளது.தமிழகத்தில் இருந்து சன்ன ரக அரிசி சிங்கப்பூர், ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது உலக மார்க்கெட்டில் அரிசியின் விலையில் டன்னிற்கு 60 டாலர் விலை குறைந்துள்ளது. இதனால் ஏற்றுமதி செய்வதை விபாபாரிகள் நிறுத்திக்கொண்டனர்.

இது ஒருபுறமிருக்க, நிலத்தடி நீரை பயன்படுத்தி நடவு செய்யப்பட்ட நெல் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. ஏ.டி.டி. 37 ரகம் மூட்டை 850க்கும், ஏ.டி.டி 45, ஏ.டி.டி., 37, ஐ.ஆர்.50, ரகங்கள் 900 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.இதன் காரணமாக ஆந்திர மாநிலத்தில் உபரியாக உள்ள அரிசியை முழுக்க தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்ட அரிசி விலையோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கிலோவிற்கு 6 ரூபாய் அளவில் குறைந்துள்ளது. அதே நேரத்தில் சன்ன ரகங்களான பி.பி.டி., பொன்னி போன்ற ரகங்கள் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

உதாரணமாக. ஏ.டி.டி., 43 ரகம் கடந்த ஆண்டு 35 ரூபாய் அளவில் விற்பனையானது. இந்த ஆண்டு விலை குறைந்து 29 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேப்போல ஐ.ஆர்.50 கிலோ 28லிருந்து 24 ஆகவும், ஐ.ஆர்.20 30 ரூபாயிலிருந்து 25 ரூபாயாகவும் குறைந்துள்ளது.கேரள மாநிலத்தில் உணவுக்காக பயன்படுத்தப்படும் மோட்டா ரக அரிசி ஆந்திராவில் இருந்து கேரளாகவுக்கு எடுத்துச்சென்று கிலோ 24 ரூபாய்க்கு கடையில் டெலிவரி செய்யப்படுகிறது.

திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் உட்பட தென் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழையால் நீர்த்தேக்கங்களில் தண்ணீர் போதுமான அளவு நிரம்பி உள்ளது. இதனால் நெல் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேலும் அரிசியின் விலை குறைய வாய்ப்புள்ளதே தவிர உயர வாய்ப்பில்லை என்கின்றனர் நெல் வியாபாரிகள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக