வியாழன், 20 ஆகஸ்ட், 2015

ஆபாச அவதுறு பேச்சுகள் : இந்திய அரசியல் யோக்கியர்கள்


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு  நரேந்திர மோடியும், ஜெயலலிதா வும் போயஸ் கார்டனில் சந்தித்துப் பேசியது பற்றி, இளங்கோவன் சொல்லிய கருத்து இன்று வில்லங்கமாகியிருக்கிறது.

இந்தப் பேச்சுக்கு மூன்று நாட்கள் கழித்து திடீரென்று அஇஅதிமுக போராட்டத்தில் இறங்கியிருக்கிறது.இளங்கோவனின் பேச்சு ஆபாசமானது. தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.



ஆனால் இந்த தரம்தாழ்ந்த விமர்சனங்கள் ஏதோ இளங்கோவனால்தான் தமிழக அரசியலில் அறிமுகமானது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்பு நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பற்றி பேசிய பேச்சுக்கள் அக்மார்க் அவதூறு பேச்சுக்கள்.

2004 ல் சோனியா காந்தி பிரதமராக வாய்ப்பிருந்தபோது, அப்படி அவர் பிரதமரானால், தான் தன்னுடைய தலைமுடியை முற்றிலுமாக மழித்துக் கொள்ளுவேன் என்று நயத்தகு நாகரிகத்தில் பேசியவர்தான் தற்போதய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். எத்தனை கேவலமான மனநிலை!

இன்றும் பாஜக எம் பி க்களும், சங் பரிவார தலைவர்களும், சோனியா காந்தியையும், ஹிந்துத்துவாவை எதிர்ப்பவர்களையும் கண்டித்து வைக்கும் விமர்சனங்கள் அநாகரீகத்தின் உச்சம். தமிழகத்தில் பாஜக தலைவர் ஹெச் ராஜா, தந்தை பெரியார் பற்றி பேசிய பேச்சு இன்னமும் அப்படியேதான் யூ டியூப்பில் உள்ளது. மேலும் அரசியலில் உள்ளவர்கள் அரசியல் எதிரிகளை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறர்கள் என்று எடுத்து கொள்ளலாம் ஆனால் பா ஜ க வின் நாடாளமன்ற உறுப்பினர் ஒருவர் டெல்லியில்  பா ஜ க விற்கு ஒட்டு போடாதவர்கள் முறை தவறி பிறந்தவர்கள் என்று மிகவும் கிழ்தமான வார்த்தைகளை கொண்டு பொது மக்களையே பேசியது ஆபாசமா, கண்ணியமா என்பதை தமிழிசை சவுந்தர்ராஜன்தான் விளக்க வேண்டும்!

இதில் அஇஅதிமுக ஏதோ சுத்த சுயம்பு என்று நான் சொல்ல வரவில்லை. தங்கள் பங்குக்கு அஇஅதிமுக வும் தமிழக அரசியலில் ஆபாச பேச்சுக்களை வளர்ப்பதில் பெரும் பங்காற்றியிருக்கிறது. இன்றல்ல, கடந்த 24 ஆண்டுகளாக தமிழக சட்டசபையில் யார் திமுகவையும், கருணாநிதியையும் அதிகமாக ஆபாசமாக பேசுகிறார்களோ அவர்கள் அமைச்சர்களாவது அம்மா ஆட்சிக் காலத்தில் எழுதப்படாத தகுதி. 1993 ஏப்ரல் 21ம் தேதி அப்போதைய அஇஅதிமுக எம்எல்ஏ தென்னவன், ‘கூட்டிக் கொடுத்து சிலர் அரசியலில் ஆதாயம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்று இரட்டை அர்த்தத்தில் பேசினார். இந்தப் பேச்சைக் கண்டித்து அன்றைய தினம் காங்கிரசின் 60 எம்எல்ஏ க்களும், திமுக வின் ஒரே உறுப்பினரான பரிதி இளம்வழுதியும் விடிய, விடிய சட்டசபையில் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினார்கள். அந்தக் கூட்டத் தொடர் முடிந்தவுடன் தென்னவன் அமைச்சரானார். இன்று அவர் திமுக வில் உள்ளார் என்பது வேறு கதை.
இதேதான் இன்று அஇஅதிமுகவில் அமைச்சர்களாக இருக்கும் பலரது கடந்த காலமும். ஜெயலலிதாவே இத்தகைய பேச்சுக்களை சட்டசபையிலேயே பேசியிருக்கிறார்.1995ம் ஆண்டு ஏப்ரல் 26 ம் தேதி சட்டசபையில் ஜெயலலிதா பேசியது இன்னமும் அவைக் குறிப்பில் உள்ளது. முதலமைச்சர் ஏன் அப்போதய ஆளுநர் சென்னா ரெட்டியை சந்திப்பதில்லை என்ற விமர்சனம் அப்போது அடிக்கடி எழுந்து கொண்டிருந்தது.

இதற்கு பதில் சொன்ன ஜெயலலிதா இவ்வாறு கூறினார்:

‘நான் ஏன் ஆளுநரை அடிக்கடி சந்திப்பதில்லை என்று விமர்சனங்கள் எழுகின்றன. மே மாதம் 31ம் தேதி சென்னா ரெட்டி ஆளுநராக பொறுப்பேற்றார். அதன் பிறகு ஒவ்வோர் மாதமும் நான் ஆளுநரை சந்தித்துக் கொண்டுதான் இருந்தேன். ஒருமுறை நான் ஆளுநர் சென்னா ரெட்டியை சந்தித்த போது அவர் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தார். இதனால்தான் நான் அவரை சந்திப்பதை நிறுத்தி விட்டேன்’ என்று பேசிய ஜெ வின் பேச்சு மிகவும் முக்கியமானது.

ஜெ.வுக்கு எதிராக வழக்குத் தொடர அப்போதய ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமிக்கு சென்னா ரெட்டி அனுமதி கொடுத்திருந்த காலகட்டம் அது. ஜெ மட்டுமல்ல, அஇஅதிமுகவின் அனைத்து மட்டத்திலும், அவர்களது பத்திரிகையான நமது எம்ஜிஆரிலும் இன்றும் திமுகவையும், கருணாநிதியையும் எத்தககைய அடை மொழிகளால் அழைக்கிறார்கள், விமர்சிக்கிறார்கள் என்பது அஇஅதிமுகவின் ‘கண்ணிய அரசிலுக்கு’ கட்டியங் கூறிக் கொண்டிருக்கிறது.மேலும் குஷ்பு  தி மு க வில் இருந்த போது அதிமுக வினரும் ஜெயலலிதாவும் கருணாநிதியை யும் குஷ்புவையும் இணைத்து ஆபாசமாக பேசியும் மானாட மயிலாட என கேலி பேசியும் திரிந்தவர் இன்றைய முதல்வர்

ஆகவே தமிழகத்தில், இடதுசாரிகளைத் தவிர்த்து, வேறெந்த அரசியல் கட்சிக்கும் ஆபாச பேச்சுக்கள் பற்றிப் பேசுவதற்கு எந்த யோக்கியதையும் கிடையாது.

இன்று தமிழகத்தின் ஜீவாதார பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்கு இளங்கோவன் பேச்சு ஆளும் கட்சிக்கு நன்றாகவே உதவிக் கொண்டிருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. மூன்று வாரங்களுக்கு முன்பு, ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய வதந்திகள் இறக்கை கட்டிப் பறந்த போது, அதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கு சசிபெருமாள் மரணமும், அதனைத் தொடர்ந்த மதுவிலக்கு போராட்டங்களும் அரசுக்கு உதவின.

ஒரு கட்டத்தில் மதுவிலக்கு போராட்டங்கள் பூதாகரமாக வெடிக்கவே, இதில் நிலை தடுமாறத் துவங்கிய ஆளும் கட்சி இன்று இளங்கோவன் பேச்சை ஊதிப் பெரிதாக்குகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.


ஆளும் கட்சியை பொறுத்த வரையில் மக்களின் உண்மையான பிரச்சனைகளை யாரும் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கக் கூடாது என்பதுதான் ஒரே இலக்கு. இதற்காக புதிது, புதிதாய் பிரச்சனைகள் உருவாவதை ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள். இளங்கோவன் விவகாரம் முடிவுக்கு வந்தால், நாளைக்கு வேறோர் பிரச்சனை வெடித்துக் கிளம்பும். மக்களின் ஜீவாதார பிரச்சனகளை தீர்க்க முடியாத அரசுகளுக்கு இது வாடிக்கையான, அவர்களுக்கு எப்போதும் கை கொடுக்கும் தந்திரம்தான்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக