வியாழன், 20 ஆகஸ்ட், 2015

மாவட்டத்தில் டாக்டர்கள் போராட்டம்...பரவுகிறது: சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் அவதி

கடலுார்:கடலுாரில் பணி பாதுகாப்பு கோரி அரசு டாக்டர்கள் நடத்திய போராட்டம் மாவட்டம் முழுவதும் 3 நாட்களாக தீவிரம் அடைந்துள்ளது. இதனால் இலவச சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

கடலுார் அரசு மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சையின் போது அறிவுக்கரசி என்பவர் இறந்ததற்கு 174 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்வதற்கு பதிலாக போலீசார் 304-ஏ பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் டாக்டர்களுக்கு பணி
பாதுகாப்பில்லை எனக்கருதி அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் சார்பில் கடந்த 18ம் தேதி முதல் அரசு தலைமை மருத்துவமனையில் தர்ணா நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக கலெக்டரை சந்தித்து டாக்டர்கள் மனு அளித்தனர். தங்கள் போராட்டம் தொடர்பாக, அரசு ஒரு முடிவு செய்து வழக்கின் பிரிவை மாற்றம் செய்யப் வேண்டும். அடுத்த 48 மணி நேரத்தில் அரசு எந்த முடிவும் எடுக்கவில்லையென்றால் போராட்டத்தை மாவட்டம் முழுவதும் தீவிரப்படுத்த முடிவு செய்தனர்.

அத்துடன் கர்ப்பிணி பெண்களுக்கான 'சிசேரியன்' சிகிச்சையைத் தவிர மற்ற அவசர அறுவை சிகிச்சைகளை செய்வதில்லை என டாக்டர்கள் தீவிரமாக இருந்தனர். அதன்படி டாக்டர்கள் கொடுத்த 48 மணி நேர கெடு நேற்றுடன் முடிவடைந்து விட்டதால் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்தனர்.
மாவட்டம் முழுவதிலும் பணியாற்றும் மருத்துவ சங்கத்தைச் சேர்ந்த டாக்டர்களை ஒருங்கிணைத்து போராடத் துவங்கினர். 3வது நாளாக நேற்று காலை கடலுார் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்துவிட்டு தர்ணா நடத்தினர். இதேப்போன்று மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே மாவட்ட அளவில் அதிக அறுவை சிகிச்சை செய்த டாக்டர்களுக்கு கலெக்டர் நற்சான்றிதழ் வழங்குதற்கான அரசு விழா அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று காலை நடைபெற இருந்தது.
டாக்டர்கள் போராட்டம் தொடர்வதால் விழாவை புறக்கணிப்பதென முடிவு செய்தனர். அதனையொட்டி, அரசு விழா தேதி அறிவிக்காமல் ஒத்தி வைக்கப்பட்டது. அரசு செவி சாய்க்காவிடில் மேலும் பல கட்ட போராட்டங்களைத் தீவிரப்படுத்த டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக