வியாழன், 27 ஆகஸ்ட், 2015

சாயப்பட்டறையை எதிர்த்து தடையை மீறி கிராம மக்கள் போராட்டம் பழ.நெடுமாறன் பங்கேற்பு

பரங்கிப்பேட்டை பரங்கிப்பேட்டை அருகே பெரியப்பட்டு சைமாடெக்ஸ் சாயப்பட்டறை கம்பெனியை தடைசெய்யக் கோரி, தடையை மீறி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். இதில் பழ.நெடுமாறன் கலந்து கொண்டனார்.

பெரியப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட தச்சம்பாளையம் கிராமத்தில் அரசு சார்பில் சாயப்பட்டறை அமைக்க முடிவு செய்து, அதற்கான பணிகள்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. தற்போது, சாயப்பட்டறை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த சாயப்பட்டறை அமைப்பதற்கு பெரியப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 5 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.


இந்த சாயப்பட்டறை அமைந்தால் நிலத்தடிநீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்றும், அந்த சாயப்பட்டறையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் கடலில் மீன்வளம் குறைந்துவிடும் என்றும் கூறி அப்பகுதி கிராம மக்கள் அந்த சாயப்பட்டறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். மேலும், இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய முன்னணி இயக்க தலைவர் பழ.நெடுமாறன் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது.தடையை மீறி போராட்டம்
ஆனால், கிராம மக்களின் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து, கிராம மக்கள் தடையை மீறி போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். அதன்படி, நேற்று 30–க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டார் வாண்டையாம்பள்ளம் கிராமத்தில் ஒன்று திரண்டனர். இதையடுத்து சிதம்பரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமையில் சுமார் 200–க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். மேலும், அந்த சாயப்பட்டறைக்கு கிராம மக்கள் செல்லாத வகையில் தடுப்புவேலி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பழ.நெடுமாறன்
இந்த நிலையில், கிராம மக்கள் ஒன்று திரண்ட இடத்துக்கு பழ.நெடுமாறன் வந்தார். அப்போது, அவர் கிராம மக்களின் மத்தியில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசியதாவது:–
‘பெரியப்பட்டில் அமைய உள்ள சாயப்பட்டறையால் நிலத்தடிநீர் பாதிக்கப்படுவதோடு கிராமமே சீரழிந்து போகும். சாயப்பட்டறையின் கழிவுநீர் கடலில் கலப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இந்த சாயப்பட்டறையை எதிர்த்து கிராம மக்கள் ஒன்றாக போராடுவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தொடர்ந்து போராடினால் இந்த சாய்பட்டறை இங்கிருந்து அகற்றி விடலாம். மக்கள் சக்தியை யாராலும் ஒன்றும் செய்யமுடியாது. உங்கள் போராட்டம் அறவழியில் நடத்தவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். தொடர்ந்து, கிராம மக்கள் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு, ஊர்வலமாக சாயப்பட்டறை கட்டுமான பணி நடைபெறும் இடத்தை நோக்கி புறப்பட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், போலீசாருக்கும், கிராம மக்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர், அவர்கள் போலீசாரை கண்டித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். பின்னர், போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தரவடிவேல் கிராம மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், மாவட்ட நிர்வாகத்திடம் இப்பிரச்சினை குறித்து கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறினர். இதனை ஏற்ற கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 கருத்துகள்:

  1. தமிழக அரசு பொதுவாகவே, மக்களுக்கான அரசாக செயல் படவில்லை! முதலாளித்துவ corporate போன்றவர்களின் கைக்கூலியாக செயல் படுவதோடு police மற்றும் சட்டம், ஒழுங்கு போன்றவைகளையும் மக்களுக்கு எதிராக திருப்பி விடுவது .......ஜனநாயகத்துக்கே கேவலம்! மக்கள், இந்த ஆளும் கட்சிக்கு சாவு மணி அடித்தாலே ஜனநாயகமும் பிழைக்கும்; மக்களாகிய நாமும் பிழைக்கலாம்! மக்கள் செய்ய முன் வருவார்களா?!

    பதிலளிநீக்கு