வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

கடலுார் மாவட்டத்தில் ஆசிரியர்கள் தில்லாலங்கடி:தூங்கி வழியும் கல்வித்துறை விழிக்குமா?

கடலுார்:கடலுார் மாவட்டத்தில் கிராமப் புறங்களில் ஓர் இலக்க மாணவர்களைக் கொண்டு இயங்கும் பள்ளிகளில் ஆசிரியர்கள் இடமாற்ற உத்தரவிலிருந்து தப்பிக்க வருகைப் பதிவேட்டில் போலி மாணவர்கள் பெயர்களை சேர்ப்பது அதிகரித்து வருகிறது.கடலுார் மாவட்டத்தில் 1800க்கும் மேற்பட்ட அரசு ஆரம்ப பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கிராமங்கள்
தோறும் அரசு ஆரம்ப பள்ளிகளைக் கட்டாயமாக துவங்கி கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. கிராமப் பகுதியில் உள்ள துவக்கப் பள்ளிகளில் கல்வித்தரம் நாளுக்கு நாள் குறைந்து வருவது கண்கூடாகத் தெரிய வந்துள்ளது.

துவக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளும் தமது குழந்தைகளை தனியார் கான்வென்ட்டில் சேர்த்து படிக்க வைக்கின்றனர். கிராம மக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே பிரபல தனியார் கான்வென்ட்டை நாடி வருகின்றனர். இதன் விளைவாக தான் சாதாரண ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூட அரசு பள்ளிகள் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்து விட்டனர். இதனால் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்ற மக்களும் தனியார் கான்வென்ட்டில் சேர்த்து படிக்க வைக்கும் மனப்பக்குவத்திற்கு தள்ளப்பட்டு விட்டனர். இதனால் கிராமப் புறங்களில் நடைபெறும் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து விட்டது.

ஆசிரியர்கள் எண்ணிக்கையை விட மாணவர்கள் எண்ணிக்கை பல பள்ளிகளில் குறைவாக உள்ளன. பல பள்ளிகளில் மொத்தமே 9 மாணவர்களுக்கும் குறைவாகவே உள்ளனர். உண்மையான மாணவர்களை வருகைப் பதிவேட்டில் பதிவு செய்தால் பள்ளிகளை இழுத்து மூட வேண்டிய நிலை ஏற்படும்.

இந்த நிலையை ஆசிரியர்களும் விரும்பவில்லை. அந்த கிராம தலைவர்களும் விரும்பவில்லை. இதன் காரணமாக ஆசிரியர்கள் இந்த ஓர் இலக்க மாணவர்களை வைத்துக்கொண்டு 4 அல்லது 5 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஆசிரியர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்றாற்போல பணியாற்றுவதற்காகவும், இடம் மாற்றல் உத்தரவில் இருந்து தப்பிப்பதற்காகவும் போலியான மாணவர்களின் பெயர்களை பட்டியலில் சேர்த்து தமது பணியை தக்க வைத்துக்கொண்டு வருகின்றனர். கடலுார் அருகே உள்ள குக்கிராமத்தில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர் ஓர் இலக்க மாணவர்கள் உள்ள பள்ளியில் பணியாற்றி வருகிறார். தினமும் பள்ளிக்குச் செல்லும் போது வழியில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து சம்பந்தமே இல்லாத ஒரு சிறுவனை தனது இருசக்கர வாகனத்திலேயே ஏற்றிச்சென்று வகுப்பில் உட்கார வைத்து சமாளித்து வருகிறார்.

இதுபோன்று பள்ளியில் பயிலும் 4 மாணவர்களுக்காக தலைமையாசிரியர், ஆசிரியர்கள், அவர்களுக்கு உணவு வழங்க சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவி சமையலர் என பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இவ்வளவு பேருக்கும் அரசு மாதாமாதம் சம்பளம் வழங்கி வருகிறது.ஒவ்வொரு பள்ளிக்கும் பல லட்சம் ரூபாய் மாதந் தோறும் கல்வித்துறைக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே கல்வித்துறை அதிகாரிகள் தொடக்கப்பள்ளிகளுக்கு திடீர் விசிட் செய்து போலி வருகைப் பதிவேட்டை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக