செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

வெங்காயத்தின் விலையேற்றம்: அரபு நாடுகளில் கண்ணீர் வடிக்கும் இந்திய ஓட்டல் முதலாளிகள்

துபாய்:இந்திய குடும்பங்களின் சமையலறையின் அத்தியாவசியமான பொருளான வெங்காயத்தின் சில்லரை விலை நமது உள்நாட்டு சந்தையில் கிலோ ஒன்றுக்கு நூறு ரூபாயை நோக்கி சென்றுகொண்டிருக்கும் நிலையில், ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் இந்திய வகை உணவுகளை விற்பனை செய்யும் ஓட்டல்களை நடத்திவரும் முதலாளிகள் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பதாக அராபிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்தியாவில் வெங்காய விளைச்சல் குறைவினால் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, அதன் விளைவாக தற்போது நீடித்துவரும் விலையேற்றம், அதனை தடுக்க ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச விலை ஆகியவற்றின் விளைவாக துபாய், சவுதி, பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் வெங்காயத்தின் விலை 30 சதவீதம் அதிகரித்து விட்டதாக ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, இங்குள்ள மொத்த சந்தையில் எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 1.5 திர்ஹம் ஆகவும், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 1.7 திர்ஹம் ஆகவும், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 2.50 திர்ஹம் ஆகவும் உள்ளது.

சில்லரை விலையில் இந்திய வெங்காயத்தின் விலை ஒரு கிலோ மூன்று திர்ஹம் முதல் மூன்றரை திர்ஹமாக உள்ளது. நீர்ச்சத்து குறைவாக உள்ளதால் இந்நாடுகளில் இந்திய வெங்காயத்துக்கு கடும் கிராக்கி உள்ளது. குறிப்பாக, இந்தியவகை பிரியாணி தயாரித்து விற்கும் உணவகங்களின் உரிமையாளர்களாக இருக்கும் இந்தியர்கள் வெங்காயத்தின் இந்த 'கிடுகிடு' விலையேற்றத்தை எண்ணி கண்ணீர் வடிப்பதாக அந்த ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக