திங்கள், 24 ஆகஸ்ட், 2015

கடலூர் துறைமுகத்தில் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்க வேண்டும்:முதுநகர் பொதுநல கூட்டமைப்பு கோரிக்கை


கடலூர்:கடலூர் துறைமுகத்தில் இருந்து சென்னைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்க வேண்டும் என்று அனைத்து பொதுநல கூட்டமைப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அனைத்து பொதுநல கூட்டமைப்புகளின் சார்பில் கடலூர் முதுநகர் வளர்ச்சி குறித்த கோரிக்கை சிறப்பு மாநாடு கடலூர் முதுநகரில் நடந்தது. மாநாட்டில் நுகர்வோர் மற்றும் பசுமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க தலைவர் கோவிந்தராஜ் வரவேற்றார். பொது நல
கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நுகர்வோர் மற்றும் சமூக சட்ட விழிப்புணர்வு சேவை மைய தலைவர் சையத் முகைதீன், மக்கள் நலச்சங்கம் முத்துக்குமரனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சமூக நலத்துறை தீர்ப்பாய உறுப்பினர் அமுதவள்ளி தேசிய கொடியேற்றினார். புகைப்பட கண்காட்சியை கடலூர் நகரசபை துணை தலைவர் சேவல்குமார் திறந்து வைத்தார். மக்கள் சட்ட விழிப்புணர்வு மற்றும் நுகர்வோர் நலச்சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ்பாபு, பொது நல கூட்டமைப்பு மாநில துணை தலைவர் ராசமோகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில நிர்வாகக்குழு தலைவர் திருமால்வளவன் கலந்து கொண்டு முதுநகர் விழித்தெழட்டும் என்ற நூலை வெளியிட்டார். மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், சித்திரகலா, வேங்கடராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மாநாட்டில் இயற்கையான கடலூர் துறைமுகத்தை ஆழப்படுத்தி, விரிவாக்கம் செய்ய வேண்டும். கடலூர் துறைமுகத்தில் இருந்து சென்னைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்தை தொடங்க வேண்டும். இதன் மூலம் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய ரெயில்கள் வந்து செல்ல மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பழமை வாய்ந்த பக்கிங்காம் கால்வாயை பராமரிக்க வேண்டும்.முதுநகரில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும். முதுநகர் மருத்துவமனையை விரிவாக்கம் செய்யவேண்டும்.
கடலூர் நகராட்சி பகுதியில் தரமான சிமெண்டு சாலை அமைக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். கடலூர் முதுநகரில் மகளிர் கல்லூரி தொடங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பொதுச்செயலாளர் தமிழ்மணி நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக