சனி, 29 ஆகஸ்ட், 2015

பிரச்சினைகள் வராமல் இருக்க ‘எல்லை தாண்டி மீன் பிடிக்க செல்லக்கூடாது’ மீனவர்களுக்கு கலெக்டர் சுரேஷ்குமார் அறிவுரை


பரங்கிப்பேட்டை:கடலில் பிரச்சினைகள் வராமல் இருக்க தமிழக எல்லையை தாண்டி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கலெக்டர் சுரேஷ்குமார் வலியுறுத்தி உள்ளார்.
விழிப்புணர்வு கூட்டம்
கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் மீனவ கிராம மக்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் பரங்கிப்பேட்டை அருகே சாமியார்பேட்டையில் நடந்தது. இதற்கு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமை தாங்கினார். மீன்வளத்துறை உதவி இயக்குனர் செல்வக்குமார், வனச்சரக
அலுவலர் சிதம்பரம், சுங்கத்துறை உதவி ஆணையர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடலோர பாதுகாப்பு குழும துணை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார், சென்னை கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை தலைவர் சொக்கலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு மீனவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினர். அப்போது கலெக்டர் சுரேஷ்குமார் கூறியதாவது:–
உரிய ஆவணங்கள்
மீனவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு வசதிகளும் காவல் துறையால் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அரசு சார்பில் உங்களுக்கு படகு மற்றும் மீன்பிடி பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை நீங்கள் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். கடலோர பகுதியில் மர்மநபர்கள் யாரேனும் சுற்றித்திரிந்தால் அவர்கள் குறித்த தகவல்களை கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
மேலும் கடலில் பிரச்சினைகள் வராமல் இருக்க நீங்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் போது உரிய ஆவணங்களை எடுத்துச்செல்ல வேண்டும். குறிப்பாக தமிழக எல்லையை தாண்டி மீன் பிடிக்க செல்லக்கூடாது கடலில் சீற்றம் அதிகரிக்கும் போது மீனவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
இதில் பரங்கிப்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஆறுமுகம், கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் சேகர், சப்–இன்ஸ்பெக்டர்கள் சிவகுருநாதன், பிரபாகரன், புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் மீனவ மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக