சனி, 29 ஆகஸ்ட், 2015

இறால் பண்ணைகளை மூடக்கோரி சிதம்பரத்தில் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

சிதம்பரம்:இறால் பண்ணைகளை மூடக்கோரி சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இறால் பண்ணைகள்
பரங்கிப்பேட்டை அருகே நவாப்பேட்டை கிராமத்தில் 40–க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக கிராமப்புற பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு வருவதாகவும், சுற்றுப்புற சூழலும் மாசடைந்து வருவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரையில் நடவடிக்கை இல்லை.

 இந்த நிலையில், இறால் பண்ணைகளை உடனடியாக மூட கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கற்பனைசெல்வம், விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் கருணைசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.


ஆர்ப்பாட்டத்தின் போது, கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டத்தை காக்க, இறால் பண்ணைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் ஒன்றிய நிர்வாகிகள் சிவலிங்கம், ஜெயசீலன், ஜீவா, வேல்முருகன், குப்புசாமி, பரமானந்தம், ராதாகிருஷ்ணன், சுனில், வினோபா, ஆசாத், எழில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக