கடலூர்:தேசிய நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று தோட்டக்கலை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் 2015–2016–ம் நிதி ஆண்டில் தேசிய நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் 100 சதவீதம் மற்றும் 75 சதவீத மானியத்தில் சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனம் அமைக்கப்பட உள்ளது. ஆகவே விவசாயிகள் தங்கள் பகுதி சம்பந்தப்பட்ட தோட்டக்கலை அலுவலர், தோட்டக்கலை உதவி அலுவலர்களிடம் விண்ணப்பம் அளித்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பத்துடன், சிறு மற்றும் குறு விவசாயி சான்றிதழ், சிட்டா மற்றும் அடங்கல் சான்றிதழ், நில வரைபடம், குத்தகை இடமாக இருந்தால் 10 வருட ஒப்பந்த பத்திரம், சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனத்துக்கான மதிப்பீடு, விவசாயி பங்கு தொகைக்கான வங்கி வரைவு ஆகிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இதேபோல் தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் மா, முந்திரி, கொய்யா, காய்கறி பயிர்கள் ஆகிய திட்ட இனங்கள் செயல்படுத்துதல், நீடித்த வேளாண்மை விரிவாக்க திட்டத்தின் கீழ் மானாவாரி சாகுபடியினை மேம்படுத்த குழுக்கள் அமைத்து, மரவள்ளி மற்றும் பசுந்தாள் பயிரிடும் விவசாயிகளுக்கு மானியமாக ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள விதை மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.
இந்த 3 திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் வருகிற 22–ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் நடைபெற உள்ள விண்ணப்பம் பெறும் முகாமில் கலந்து கொண்டு, விண்ணப்பம் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட தகவலை கடலூர் தோட்டக்கலை துணை இயக்குனர் (பொறுப்பு) மணிமொழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.











0 கருத்துகள்:
கருத்துரையிடுக