சனி, 25 ஜூலை, 2015

கடலூரில் 500 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல்: கிடங்குக்கு சீல்

கடலூர் :கடலூரில் 500 கிலோ கலப்பட டீத்தூள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. அவை பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்தவரின் கிடங்குக்கு சீல் வைக்கப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் டீக்கடைகளில் பயன்படுத்தப்படும் டீத்தூள் குறித்து மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிக்கு ஏராளமான புகார்கள் வரத்தொடங்கின. இதனைத் தொடர்ந்து, உணவுப் பாதுகாப்பு அதிகாரி எம்.பி.ராஜா மற்றும் அலுவலர்கள் நந்தகுமார், சுப்பிரமணியன், நல்லத்தம்பி ஆகியோர் கடலூர் முதுநகர் பகுதிகளில் உள்ள டீத்தூள் மொத்த விற்பனைக் கிடங்குகளில் சோதனை நடத்தினர்.
இதில், கடலூர்-சிதம்பரம் சாலையில் உள்ள மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த மாறன் என்பவருக்குச் சொந்தமானக் கிடங்கில் இருந்த டீத்தூள்கள் அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த 500 கிலோ டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அந்த கிடங்குக்கும் சீல் வைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட டீத்தூள்களின் மாதிரி சென்னையில் சோதனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், சோதனை முடிவின் அடிப்படையில் டீத்தூள் மொத்த உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உணவுப் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக