புதன், 22 ஜூலை, 2015

வாக்காளர் நீக்கப் பட்டியலில் 40,000 பேர் :

கடலூர் :கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் நீக்கப் பட்டியலில் 40,152 பேர் உள்ளதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திய தேர்தல் ஆணையத்தால் தேசிய அளவில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்துதல் மற்றும் உறுதிப்படுத்தும் திட்டம் கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் நோக்கம், வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் விவரங்களை சரிபார்த்து இறந்தவர்கள் மற்றும் நிரந்தரமாக வெளியூர் சென்றுவிட்டவர்களின் பெயர்களை நீக்குவதும், பிழையில்லா வாக்காளர் பட்டியல் வெளியிடுவதுமே ஆகும். அதன்படி மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பெறப்பட்ட விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் மார்ச் 3ஆம் தேதி முதல், ஜூன் 30ஆம் தேதி வரை இத்திட்டத்தின் பேது 18,658 நபர்கள் புதிய வாக்காளர்களாக பதிவு செய்திட அளித்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு 18,213 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். பெயர் நீக்கம் செய்ய அளித்த 792 மனுக்களில் 789 மனுக்கள் ஏற்கப்பட்டன.
திருத்தம் செய்யப்படுவதற்காக 8,906 பேரிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, அதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த 8,842 பேருக்கு உரிய திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
2,756 நபர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் ஒரே தொகுதிக்குள் மாற்றம் செய்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் சரிபார்ப்பின்போது, வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்களில் 26,459 வாக்காளர்கள் உரிய விண்ணப்பப் படிவம் அளிக்காமல் இடம் மாறியுள்ளதாலும், 13,693 நபர்கள் இறந்துள்ள காரணத்தினாலும் நீக்கல் பட்டியலில் உள்ளனர். மேலும், 5,818 நபர்களின் பெயர்கள் ஒரு பட்டியலில் 2 இடங்களிலும், 10,542 நபர்களின் பெயர்கள் ஒரே தொகுதியில் 2 இடங்களிலும் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் வசிக்கும் இடம் மற்றும் விருப்பத்தின் பேரில் இரண்டு இடங்களில் இடம் பெற்றுள்ள பெயர்களில் ஒரு இடத்தின் பெயர் நீக்கம் செய்வது தொடர்பாக அவ்வாக்காளர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளித்திட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
புதிதாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் விவரம், நீக்கம் செய்யப்பட உள்ளவர்களின் விவரம், திருத்தம் செய்யப்பட்டவர்களின் விவரம் குறித்த பட்டியல் புதன்கிழமை (ஜூலை 22) மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர்கள் அலுவலகம், நகராட்சி ஆணையர்கள் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். இப்பட்டியலின் குறுந்தகடும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மத்திய, மாநில கட்சியினருக்கு வழங்கப்படும்.
எனவே, பொதுமக்கள் அனைவரும் அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதை உறுதி செய்திடவும், தவறுதலாக நீக்கல் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருந்தால் அதனை தெரிவித்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், அரசியல் கட்சியினர் பட்டியலில் இருப்பவர்களின் பெயர்களை சரிபார்த்து, சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு உள்பட்ட பகுதியில் வசிப்பவர்களின் பெயர் தவறுதலாக நீக்கல் பட்டியலில் இடம் பெற்றிருந்தாலோ அல்லது இல்லாத வாக்காளர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தாலோ அதனை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடம் தெரிவிக்கலாம்.
இதனால், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும்போது, 100 சதவீதம் பிழையில்லா பட்டியல் வெளியிட ஏதுவாக இருக்கும். எனவே, வாக்காளர்கள் அனைவரும் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலுக்கு போதிய ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக