புதன், 22 ஜூலை, 2015

ஒரு மாணவர் கூட இல்லாத ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கூடம்

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அருகே ஒரு மாணவர் கூட இல்லாத ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கூடம் செயல்படுகிறது. இப்பள்ளிக்கு மாணவர் வருகையை எதிர்பார்த்து தலைமை ஆசிரியர் மட்டும் வந்து செல்கிறார்.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ளது குமாரபேட்டை மீனவர் கிராமம். இங்கு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கூடம் செயல்படுகிறது. இந்த பள்ளியில் ஆண்டுக்கு ஆண்டு மாணவர் சேர்கை குறைந்து கொண்டே வந்தது. கடந்த கல்வி ஆண்டில் மாணவ–மாணவிகளின் எண்ணிக்கை 8 ஆக குறைந்தது.
இந்த கல்வி ஆண்டில் அவர்களும் மாற்றுச்சான்றிதழை வாங்கிக்கொண்டு வேறு பள்ளிக்குச்சென்று விட்டனர். மேலும் ஒரு மாணவர் கூட நடப்புக்கல்வி ஆண்டில் சேரவில்லை. இதனால் மாணவரே இல்லாமல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.
தலைமை ஆசிரியர் மட்டும்... இப்பள்ளியில் தலைமை ஆசிரியரும், இடைநிலை ஆசிரியர் ஒருவரும் பணியாற்றி வருகிறார்கள். மாணவர்கள் யாரும் இல்லாததால், இடைநிலை ஆசிரியர் மனோகரன் அயல்பணிக்காக டி.புதுப்பேட்டை பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் தலைமை ஆசிரியர் மட்டும் பள்ளிக்கு தவறாமல் வந்து சென்று கொண்டு இருக்கிறார். ஆனால் அவர் கற்றுக்கொடுப்பதற்குத்தான் மாணவ–மாணவிகள் யாரும் இல்லை.
இந்த கிராமத்தை பொறுத்தவரையில் மக்கள் தொகை சுமார் 200 தான் உள்ளதாம். அங்கு பள்ளிக்கு செல்லும் வயதுடைய மாணவர்களும் 21 பேர் தான் உள்ளனர். அவர்களும் சாமியார்பேட்டையில் உள்ள பள்ளியிலும் அருகே உள்ள தனியார் நர்சரி பள்ளியிலும் சேர்ந்து விட்டனர். இதனால் இனிமேல் மாணவர்கள் சேரவருவார்களா என்பது சந்தேகமே!
அதிகாரி விளக்கம் இதுபற்றி உதவி தொடக்கக்கல்வி அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–
நடப்பு மாதம் வரை பள்ளியில் மாணவர்களை சேர்க்கலாம் என்பதால், யாராவது மாணவர்கள் சேர வந்தால் பள்ளிக்கூடம் மூடிக்கிடக்கிறதே என்று ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்று விடக்கூடாது என்பதற்காக தலைமை ஆசிரியரை மட்டும் இடமாற்றம் செய்யாமல் வைத்துள்ளோம். அவர் மாணவர் சேர்க்கையை எதிர்பார்த்து பள்ளிக்கு வந்து சென்று கொண்டிருக்கிறார்.
பள்ளிக்கூடத்தை மூடினால் திரும்பக் கொண்டு வரமுடியாது என்பதால், குறைந்தது 15 மாணவர்களையாவது சேர்த்துத் தாருங்கள் என்று கிராமக்கல்விக்குழு தலைவரிடம் அறிவுறுத்தியிருக்கிறோம். இதுதொடர்பாக இருமுறை கிராமத்தில் கூட்டம் நடத்தி இருக்கிறோம். இந்த மாதத்துக்குள் மாணவர்கள் சேரவில்லையெனில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேப்போல் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குமாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும் ஈராசிரியருடன் இயங்கி வருகிறது. இங்கும் 8 மாணவர்கள் மட்டுமே படிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக