வெள்ளி, 24 ஜூலை, 2015

18 ஆயிரம் என்.எல்.சி.ஊழியர்கள் ஸ்டிரைக்: நெய்வேலியில் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்

நெய்வேலி:நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊழியர்களுக்கு புதிய சம்பள முறை மாற்றி அமைக்கப்பட்டு ஒப்பந்தம் செய்யப்படுகிறது.
அதன்படி கடந்த 2012–ம் ஆண்டு புதிய சம்பள ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், சம்பள உயர்வு தொடர்பாக நிர்வாகத்துக்கும், தொழிற் சங்கத்துக்கும் இடையே பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உரிய முடிவு எட்டப்படவில்லை.
இதையடுத்து கடந்த 20–ந் தேதியில் இருந்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இன்று 5–வது நாளாக வேலை நிறுத்தம் நீடித்து வருகிறது.
என்.எல்.சி.யில் 12 ஆயிரம் நிரந்தர ஊழியர்களும், 10 ஆயிரம் தற்காலிக ஊழியர்களும், 4 ஆயிரம் அதிகாரிகளும் பணியாற்றி வருகிறார்கள்.
இவர்களில் நிரந்தர ஊழியர்கள் மட்டும் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்தனர். அவர்கள் ஒட்டு மொத்தமாக வேலைக்கு செல்லவில்லை. அவர்களுக்கு ஆதரவாக தற்காலிக ஊழியர்களிலும் ஒரு பகுதியினர் வேலைக்கு செல்லவில்லை.
நிரந்த ஊழியர்கள் 12 ஆயிரம் பேர், தற்காலிக ஊழியர்கள் சுமார் 6 ஆயிரம் பேர் என மொத்தம் 18 ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் என்.எல்.சி.யில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மற்ற அத்தியாவசிய பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் சென்னையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. அதில் உடன்பாடு ஏற்படாமல் தோல்வி ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தை ஊழியர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர். இதனால் என்.எல்.சி பணி பாதிப்பு அதிகரித்து வருகிறது.
என்.எல்.சி.யில் மொத்தம் 4 அனல்மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் 10 நாள் மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரிகள் ஏற்கனவே வெட்டி இருப்பில் வைக்கப்பட்டிருந்தன. அவை கன்வேயர் பெல்ட் மூலம் அனல்மின் நிலையங்களுக்கு கொண்டு வரப்படுகிறது. தானியங்கி மூலம் அனல்மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி ஆகிறது.
இருப்பில் உள்ள நிலக்கரிகள் வேகமாக தீர்ந்து வருகின்றன. இன்னும் 4 அல்லது 5 நாட்களுக்கு தேவையான நிலக்கரியே இருப்பில் உள்ளது. நிலக்கரியை வெட்டி எடுக்கும் தற்காலிக ஊழியர்களும் குறைந்த அளவே வேலைக்கு வருவதால் நிலக்கரி உற்பத்தியும் வெகுவாக குறைந்துள்ளது.
இதனால் 4 அல்லது 5 நாளில் மின் உற்பத்தி பாதிக்க தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4 மின் நிலையங்களிலும் மொத்த உற்பத்தி திறன் 2990 மெகாவாட். இன்று காலை 9 மணி நிலவரப்படி 2089 மெகாவாட் உற்பத்தியானது. அதாவது மொத்த உற்பத்தி திறனில் இருந்து 901 மெகாவாட் குறைவாக உற்பத்தி ஆனது.
600 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட முதல் அனல்மின் நிலையத்தில் 389 மெகாவாட் உற்பத்தியானது. 420 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட முதல் அனல்மின் நிலைய விரிவாக்கத்தில் 353 மெகாவாட் உற்பத்தியானது.
1470 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2–வது அனல் மின் நிலையத்தில் 1252 மெகாவாட்டும் 500 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 2–வது அனல்மின் நிலைய விரிவாக்கத்தில் 95 மெகாவாட்டும் உற்பத்தியானது.
இது பற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது என்.எல்.சி.யில் வழக்கமான சாராசரி அளவு போல் இன்றும் மின் உற்பத்தி நடந்து கொண்டு இருக்கிறது. வேலை நிறுத்தத்தால் மின் உற்பத்தியில் பாதிப்பு இல்லை. வேலை நிறுத்தத்துக்கு முன்பும் இதே அளவில்தான் மின்சாரம் உற்பத்தியானது என்று கூறினார்கள்.
என்.எல்.சி.யில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 1460 மெகாவாட் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்படுகிறது. மீதி மின்சாரம் மத்திய தொகுப்புக்கு அனுப்பப்பட்டு புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு செல்கிறது.
என்.எல்.சி.யில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டால் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் மின்சாரம் குறையும். இதனால் தமிழ்நாட்டில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
தமிழ்நாட்டுக்கு தினமும் 12 ஆயிரத்து 102 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. தற்போது காற்றாலையில் சராசரியாக 2500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி ஆகி வருகிறது.
எனவே என்.எல்.சி.யில் மின்சாரம் தடைபட்டாலும் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படாது என்று தமிழக மின்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் காற்றாலை மின்சாரத்தை எப்போதும் நம்பி இருக்க முடியாது. காற்று குறைந்து விட்டால் மின் உற்பத்தி முடங்கி விடும். காற்றாலை கைகொடுத்தால் தான் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு இல்லாமல் அமையும்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் என்.எல்சி. ஊழியர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தையும் தொடங்கி உள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக