ஞாயிறு, 28 ஜூன், 2015

போலீஸார் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு: இன்ஸ்பெக்டர் உட்பட 7 காவலர்கள் மீது வழக்கு,


ஆம்பூர் :எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில் கடந்த 14-10-2014 அன்று விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட சையது முகம்மது என்ற இளைஞர் எஸ்.ஐ. காளிதாஸ் துப்பாக்கியால் சுட்டதில் இறந்தார். இந்நிலையில் மற்றுமொரு சம்பவமாக காவல்துறையால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு வாலிபர், சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டதில் சிகிச்சை பலனின்றி இறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், ஆம்பூரைச் சேர்ந்தவர் ஷமீல் அஹமது (26). இவரை ஒரு வழக்கு தொடர்பாக அப்போது பள்ளிகொண்டா காவல் ஆய்வாளராக இருந்த மார்ட்டீன் பிரேம்ராஜ் கடந்த இரு வாரங்களுக்கு முன் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ரகசிய இடத்தில் வைத்து விசாரணை என்ற பெயரில் இளைஞர் சித்ரவதை செய்யப்பட்டதால் காயமடைந்த ஷமீல் அஹமது ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், வெள்ளிக்கிழமை மாலை இறந்தார்.சித்திரவதை எதிர்ப்பு தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்ட அன்று இந்த துயர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

காவல்நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்யப்பட்டதால் தான் அவன் இறந்தார். அதனால் கொலை வழக்காக இந்த வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும், இன்ஸ்பெக்டரை கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிபந்தனையின்றி போதுமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இஸ்லாமிய இயக்கங்கள் எழுப்பின.
இந்நிலையில், நேற்று மாலை, 4 மணிக்கு சில அமைப்பினர், பள்ளிகொண்டா போலீஸ் ஸ்டேஷனை, முற்றுகையிட்டனர். இதையடுத்து ஆம்பூரில் 5 டி.எஸ்.பிகள் தலைமையில் ஐநூறுக்கும் அதிகமான போலிஸார் குவிக்கப்பட்டனர். வேலூர் சரக காவல்துறை தலைவர் தமிழ்ச்சந்திரன், எஸ்.பி செந்தில்குமாரி ஆம்பூர்க்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருப்பினும் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இஸ்லாமிய இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து 1000 த்திற்கும் மேற்பட்டோர் சென்னை பெங்களுரு தங்க நாற்கர சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் விடுத்த கோரிக்கையை ஏற்கவில்லை. இதனால் போலீசாருக்கும் மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் எஸ்.பி. செந்தில்குமாரி உள்பட 4 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. இரண்டு பத்திரிக்கையாளர்கள் கல்வீச்சில் காயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் நந்தகோபால், ஆம்பூருக்கு விரைந்தார். நிலைமையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கலவரம் ஏற்பட காவல் துறை யின் அடாவடி பேச்சே காரணம்  என தெரிகிறது  இந்நிலையில், ஆய்வாளர் மார்டின் பிரேம்ராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் சபாரத்தினம், போலீஸார் நாகராஜ், அய்யப்பன், சுரேஷ், முரளி, முனியன் ஆகியோர் ஷமீல் அஹ்மதுவை காவலில் வைத்து தாக்கியதாக அலி அக்பர் (40) என்பவர் அளித்த புகாரின்பேரில் பள்ளிகொண்டா போலீஸார், 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் பிரேம்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும்  மறியலில் ஈடுபட்டவர்கள் 190 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.



 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக