வெள்ளி, 24 ஏப்ரல், 2015

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை அமல்படுத்த அவசரம் காட்டுவது ஏன்? காதர்மொய்தீன் கேள்வி

விருத்தாசலம் :நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு அவசரம் காட்டுவது ஏன்? என இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சி தலைவர் காதர்மொய்தீன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொதுக்கூட்டம்

மங்கலம்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவன நாள் பொதுக்கூட்டம் நகர தலைவர் நூர்முகமது தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் சுப்பு, தலைவர் அமானுல்லா, சட்ட ஆலோசகர் பாரிஇப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்துல் ரஷீத்
ரஹ்மானி கூட்டத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக நகர செயலாளர் சர்தார் வரவேற்றார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.பி. அப்துர்ரகுமான், மாநில துணைதலைவர் சபிக்குர்ரகுமான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்கள். பின்னர் கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத்தலைவர் காதர்மொய்தீன் கலந்து கொண்டு பேசியதாவது:-

அனைத்து மக்களுடனும் அரசியல் ரீதியான தோழமை நட்புடன் வாழ்வதற்கு முஸ்லிம் லீக் பாடுபட்டு வருகிறது. இக்கட்சிக்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைப்பதற்கான வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது.

தமிழகத்தில் முதல்-அமைச்சர் பதவிக்கு விருப்பப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கெல்லாம் ஆசைப்படாதவர்கள் நாங்கள் மட்டுமே.

மேற்கண்டவாறு காதர்மொய்தீன் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட துணைதலைவர் ஹபீபுர்ரகுமான், துணை செயலாளர் அப்துல்ரகுமான், நகர இளைஞர் அணி தலைவர் சலாவுதீன், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர துணை செயலாளர் நூருல்லா நன்றி கூறினார்.

பேட்டி

முன்னதாக காதர்மொய்தீன் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தெலுங்கானாவில் 5 முஸ்லிம் இளைஞர்கள் கோர்ட்டுக்கு போகும் வழியிலேயே என்கவுண்டர் முறையில் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் உண்மையை அறிய சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.

அதேபோல் ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்டனர். காவல்துறை சட்டத்தையும், நீதித்துறையையும் தன் கையில் எடுத்துள்ளது. இது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்தான, கண்டனத்துக்குரிய விஷயமாகும். காவல்துறை தனது எல்லையை மீறாமல் பார்த்து கொள்ள வேண்டியது மத்திய, மாநில அரசின் கடமையாகும்.

சர்வாதிகாரம்

இந்தியா, அரசியல் சட்டத்தை பின்பற்றி நடக்கிற ஜனநாயக நாடு. பல்வேறு இன மக்கள் வாழும் இந்த நாட்டில் சர்வாதிகாரத்திற்கு இடம் கிடையாது. நிலம் கையகப்படுத்தம் சட்டத்திற்கு எதிர்ப்பு வந்த நிலையிலும் கூட மத்திய பா.ஜ.க. அரசு அதனை மீண்டும் நிலைக்குழுவிற்கு அனுப்பாமல் அவசர சட்டமாக கொண்டு வர முயற்சிப்பது ஏன்.? இது சர்வாதிகார போக்கின் அடையாளமாகும். முஸ்லிம்கள் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளவில்லை என்றால் அவர்களது வாக்குரிமையை பறிப்போம் என்று தொடர்ந்து மத்திய மந்திரிகள் பேசி வருவது ஏதேச்சதிகாரத்தின் குரலாகும்.

இதன்மூலம் இந்து, முஸ்லிம்களிடையே மோதலை உருவாக்கி அரசியல் லாபம் தேட நினைக்கிறார்கள். இது தமிழகத்தில் ஒருபோதும் நடக்காது. மத்திய அரசு முன்னேற்ற திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டுமே தவிர, நேரடியாகவோ மறைமுகமாகவோ மோதல் அரசியலுக்கு முயற்சி செய்ய கூடாது.

சட்டம்-ஒழுங்கு

தமிழகத்தை பொறுத்தவரை கொலை, கொள்ளை அதிகமாக நடக்கிறது. சட்டம் -ஒழுங்கை நிலைநாட்டுவதில் தமிழக அரசு கவனமுடன் செயல்பட வேண்டும். ஐ.எஸ்.ஐ.எஸ். என்கிற தீவிரவாத அமைப்பு இஸ்லாமிய ஆட்சியை கொண்டு வருவதாக கூறி அராஜகம், வன்முறை போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு இந்திய முஸ்லிம்கள் ஒருபோதும் துணை போக மாட்டார்கள்.

மேற்கண்டவாறு காதர்மொய்தீன் தெரிவித்தார். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக