சனி, 13 டிசம்பர், 2014

கணவர் கொலை:மனைவிக்கு ஆயுள் - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சிதம்பரம்:பரங்கிப்பேட்டை அருகே உள்ள அரியகோஷ்டி அகரத்தில் கணவரை கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து சிதம்பரம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பு அளித்தது.
பரங்கிப்பேட்டை அரியகோஷ்டி அகரம் மெயின்ரோட்டைச் சேர்ந்த கவியரசு மகன் சண்முகம்(48). இவருக்கும் நாகை மாவட்டம் எருக்கூரைச் சேர்ந்த சத்யா(38) என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. 3 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், சண்முகம் அடிக்கடி வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று திரும்பி வந்துள்ளார். அப்போது அவரது மனைவி சத்யாவுக்கும், அப்பு என்கிற சண்முகத்துக்கும்(29) தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த சண்முகம், மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சத்யா, கடந்த 2012}ஆம் ஆண்டு சண்முகம் தூங்கும்போது அவரது முகத்தில் துணியை வைத்து அழுத்தி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சத்யா, காதலன் அப்பு என்கிற சண்முகம் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இந்தக் கொலை வழக்கு சிதம்பரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், விசாரணை முடிவுற்று நீதிபதி கிங்க்லி கிருஸ்டோபர் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கினார். வழக்கில் குற்றம் நிருபிக்கப்பட்டதால், சத்யாவுக்கு ஆயுள்தண்டனை விதித்தும், அப்பு என்கிற சண்முகத்தை விடுதலை செய்தும் தீர்ப்பு அளித்தார்.
பின்னர் சத்யா வேலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு, அடைக்கப்பட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக