புதன், 19 நவம்பர், 2014

ஆதார் அடையாள அட்டை பதிவுக்கு புகைப்படம் எடுக்கும் பணி துவக்கம்

கடலூர்:கடலூர் மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 4 தாலுகாக்களில் ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி மீண்டும் நடைபெற்று வருகிறது.
தனி மனிதனுக்கான அடையாளமாக ஆதார் அடையாள அட்டை கருதப்படுகிறது. என்றாலும் சமையல் கியாஸ் இணைப்புக்கான மானியம் பெறுவதற்கும், புதிதாக இணைப்பு வாங்குவதற்கும் மற்றும் அரசின் சலுகைகளை பெறுவதற்கும் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் அடையாள அட்டை உள்ளது.ஆதார் அடையாள அட்டைக்காக புகைப்படம் எடுக்கவும் மற்றும் விரல் ரேகைகளை பதிவு செய்வதற்காகவும் ஊரக பகுதிகளில் முகாம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நகராட்சிகளில் வார்டு வாரியாக நடைபெற்றன. இதில் விடுபட்டு போனவர்களுக்காக 2-வது கட்ட முகாம் நடைபெற்றது.



 தற்போது 3-வது கட்ட முகாம் கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, சிதம்பரம் ஆகிய 3 நகராட்சிகள், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், கடலூர், பண்ருட்டி ஆகிய 4 தாலுகாக்களிலும் அந்தந்த அலுவலக வளாகத்திலேயே ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுத்தல் மற்றும் விரல் ரேகைகளை பதிவு செய்யும் பணி நடைபெற்றுவருகிறது. தினமும் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணிவரை முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் கூறியதாவது:-



 கடலூர் மாவட்டத்தில் ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுப்பதற்காக 3-வது கட்ட முகாம் 3 நகராட்சிகள், 4 தாலுகாக்களில் கடந்த 12-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள நகராட்சிகள் மற்றும் தாலுகாக்களில் ஒருவார காலத்துக்குள் முகாம் தொடங்கி விடும். இந்த முகாம் ஓராண்டு நடைபெறும். அதன் பின்னர் அரசு கால நீட்டிப்பு செய்தால் தொடர்ந்து நடைபெறும். ஏற்கனவே நடைபெற்ற முகாம்களில் பணிநிமித்தம், இடமாற்றம் காரணமாக கலந்துகொள்ள முடியாதவர்கள், விடுபட்டு போனவர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். இவர் களுக்கு ஒரு மாத காலத்துக்குள் அடையாள அட்டை வழங்கப்படும்.



 புகைப்படம் எடுக்க வரும்போது 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது வழங்கப்பட்ட சான்று, அத்துடன் ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், வருமான வரி அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்து வர வேண்டும். மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது வழங்கப்பட்ட சான்று இல்லாத பட்சத்தில் அந்த நபரின் குடும்பத்தில் வேறு யாருக்கும் ஆதார் அடையாள அட்டை இருந்தால் அவற்றை கொண்டு வரலாம்.

ஆதார் அடையாள அட்டைக்கு புதிதாக புகைப்படம் எடுக்க வேண்டியவர்கள், ஏற்கனவே புகைப்படம் எடுத்து பெயர் விடுபட்டு போனவர்கள் இவர்களுக்கு சாப்ட்வேர் மாற்றப்பட்டு 15 நாட்களுக்கு பிறகு இதே முகாம்களில் புகைப்படம் எடுக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் புகைப்படம் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக