சனி, 1 நவம்பர், 2014

மழையால் சேதமடைந்த நெற்பயிர்கள் : வருவாய்த் துறை செயலர் ககன்தீப்சிங்பேடி ஆய்வு


கடலூர்: மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைய வாய்ப்பு அதிகமாக உள்ளதால், தகுந்த முன்னேற்பாடுகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு வருவாய் துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை பொய்த்த நிலையில், இந்தாண்டு வடகிழக்கு பருவமழை கடந்த 17ம் தேதி துவங்கியது முதல் ஒரு வாரம் கனமழை கொட்டியது. இதன் காரணமாக மாநிலத்தில் பல பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டது. கடலூர் மாவட்டத்தில் ஒரே வாரத்தில் 309.7 மி.மீ., மழை கொட்டியது. வடிகால் வசதி இல்லாத காரணத்தினால், வயல்களில் மழைநீர் தேங்கியதால் பல்லாயிரம் ஏக்கரில் இருந்த நெற்பயிர் நாற்றுகள் தண்ணீரில் மூழ்கி அழுகியது. இதனால் விவசாயிகள் இழப்பீடு கோரி வருகின்றனர்.
அதனையொட்டி மழை பாதிப்பை பார்வையிட்டு கணக்கீடு செய்யவும், தகுந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள வருவாய் துறை செயலரான ககன்தீப்சிங் பேடி நேற்று கடலூருக்கு வருகை தந்தார். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது சிறப்பு அதிகாரி ககன்தீப்சிங் பேடி பேசியதாவது:
வடிகால் மாவட்டமான கடலூரில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. அதில் இம்மாதத்தில் பெய்ய வேண்டிய சராசரி அளவைவிட 41 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. இதனால், பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஓரிரு நாளில் மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக வரும் 7 மற்றும் 8ம் தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதனால் பொதுப்பணித் துறையினர் வெள்ள நீர் வடியும் பகுதிகளை கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை, வருவாய், தீயணைப்பு, சுகாதாரம், மின் துறை, குடிநீர் வடிகால் வாரியம், உள்ளாட்சி உள்ளிட்ட அனைத்து துறை ஊழியர்கள் ஒருங்கிணைந்து தகுந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். ரேஷன் கடைகளில் போதிய அளவில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தயார் நிலையில் இருப்பு வைக்க வேண்டும். சமீபத்தில் பெய்த மழையால் ஏற்பட்ட பயிர் பாதிப்புகளை வருவாய் மற்றும் வேளாண் துறையினர் இணைந்து கணக்கெடுப்பு எடுத்து பட்டியல் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். குடிநீர் மூலம் தொற்று நோய் பரவுவதை தடுக்கவும், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய் பரவுவதைத் தடுக்க கொசு மருந்து அடித்திடவும், எதிர் வரும் தொடர் மழையின் போது சாலையில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்திடவும், பாதிப்பு ஏற்பட்டால் உடன் மீட்பு பணி மேற்கொள்ளும் வகையில் நெடுஞ்சாலை துறையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும். அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, மாவட்டத்தில் மழை பாதிப்பை முற்றிலுமாக தடுத்திட வேண்டும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இன்று முதல் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ககன்தீப் சிங் பேடி பேசினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக