சென்னை:தமிழக காங்கிரஸ் கட்சி உடைந்தது. ஜி.கே.வாசன் தலைமையில் புதிய கட்சி உருவானது. தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், புது இயக்கம் தொடங்கியதாக அறிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். அவருடன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஞானதேசிகன், காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்ஃபோன்ஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
புதிய இயக்கத்தின் பெயரும், கொடியும் திருச்சி மாநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்படும். திருச்சி பொதுக் கூட்டம் தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என வாசன் தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில், "காங்கிரஸ் கட்சியின் மறைந்த தலைவர்கள் வழிகாட்டுதல், ஆசி இன்று தொடங்கப்பட்டுள்ள புதிய இயக்கத்தை பலப்படுத்தும். தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் இயக்கம் செயல்படும்.
அடித்தட்டு மக்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் உரிமைகளை பெற்றுத்தர அர்ப்பணித்துக் கொள்வோம், இளைஞர், மகளிர் நலன், மாநிலப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வளமான தமிழகம் தான் லட்சியம். தமிழக இளைஞர்கள் புதிய விடியல், புதிய கலாச்சாரத்தை எதிர்ப்பார்க்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பை ஈடு செய்வோம். தமிழக மக்கள் நலனை முன்நிறுத்தி இயக்கம் செயல்படும்.
மூப்பானருக்கு எவ்வாறு ஆதரவு தந்தீர்களோ, அதுபோல் புதிய இயக்கத்திற்கும் தமிழக மக்கள் ஆதரவு தர வேண்டும். ஜனநாயகம், மதச்சார்பற்ற அராசியல், எல்லோரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி, திறந்த வெளிப்படையான அரசு நிர்வாகம், சமூக நீதி இதுவே இன்று தொடங்கப்பட்ட இயக்கத்தின் நோக்கம்" என்றார் ஜி.கே.வாசன்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த ஜி.கே.மூப்பனார், கூட்டணி விவகாரத்தில் கட்சித் தலைமையின் முடிவை எதிர்த்து 1996-ம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். திமுகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற தமாகா, முக்கிய கட்சியாக உருவெடுத்தது. 2001-ல் மூப்பனார் மறைவுக்கு பிறகு தமாகா தலைவராக ஜி.கே.வாசன் பொறுப்பேற்றார். பின்னர், 2002-ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸுடன் தமாகாவை இணைத்தார். மத்திய காங்கிரஸ் அரசில் அமைச்சரானார் வாசன். தனது ஆதரவாளரான ஞானதேசிகனை தமிழக காங்கிரஸ் தலைவராக கொண்டுவந்தார்.
இந்நிலையில், மாநில தலைமையை கட்சி மேலிடம் புறக்கணிப்பதாக கூறி, கடந்த 30-ம் தேதி தலைவர் பதவியை ஞானதேசிகன் ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய கட்சி தொடங்க ஜி.கே.வாசன் முடிவு செய்துவிட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து கடந்த 3 நாட்களாக தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்த வாசன், தனது முடிவை இன்று அறிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக