வெள்ளி, 7 நவம்பர், 2014

மாவட்டத்தில் 64 மீனவ கிராமங்களில் வேலை நிறுத்தம், கருப்புக்கொடி



கடலூர் :இலங்கை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரை விடுவிக்கக் கோரி, கடலூர் மாவட்டத்தில் 64 மீனவ கிராமங்களில் புதன்கிழமை கருப்புக் கொடி போராட்டம், வேலை நிறுத்தம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட 64 மீனவர் கிராம பஞ்சாயத்துகள் சார்பில் நடத்தப்பட்ட அவசரக் கூட்டத்தில், ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவின்படி இந்த ஒட்டுமொத்த வேலைநிறுத்தம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்டத்தில் 1,000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 10 ஆயிரம் பைபர் படகுகள் கருப்புக்கொடி ஏற்றப்பட்டு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் 50 ஆயிரம் வீடுகளில் மீனவர்கள் கருப்புக்கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். மீனவ இளைஞர்களும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் மோட்டார் சைக்கிள்களில் கருப்புக்கொடி பேரணி நடத்தினர்.
இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து படகு உரிமையாளர்கள் சங்கம், மீன் பிடி தொழிலாளர்கள் சங்கம், மீன் வணிகர்கள், மீன் ஏற்றுமதி நிறுவனங்கள், மீனவர் மகளிர் பேரவையினர், மீன் மார்க்கெட் வியாபாரிகள் முழு அடைப்பில் ஈடுபட்டனர்.
புதன்கிழமை காலை, கடலோர கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 5 ஆயிரம் பேர் துறைமுகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உருவ பொம்மையை தீ வைத்து கொளுத்தி எதிர்ப்பு தெரிவித்தனர். கடலூர் தேவனாம்பட்டினம் கிராம மீனவ பஞ்சாயத்தார் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 64 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், கிராம பஞ்சாயத்தார்கள், முக்கியஸ்தர்கள், மீன் வியாபாரிகள் சங்கத்தினர், மகளிர் மீன் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் சட்டையில் கருப்பு சின்னம் அணிந்து பங்கேற்றனர். சிலர் கையில் கருப்பு கொடி ஏந்தி கலந்து கொண்டனர்.இதில் இலங்கை அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக