ஞாயிறு, 5 அக்டோபர், 2014

தொடர் விடுமுறையால் பிச்சாவரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

பரங்கிப்பேட்டை:தொடர் விடுமுறை எதிரொலியாக பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகுசவாரி செய்தனர்.

 கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மாங்குரோவ் காடுகள் நிறைந்த பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இங்கு வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் உள்ளூர் சுற்றுலா பயணிகள் என தினமும் 100–க்கும் மேற்பட்டவர்கள் வந்துசெல்வது வழக்கம். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.

 கடந்த வாரம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிராக பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதன் காரணமாக பிச்சாரவம் சுற்றுலா மையத்துக்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்து, சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்களில் வெறிச்சோடி காணப்பட்டது.

 இந்நிலையில் ஆயுதபூஜை, விஜயதசமி, சனி, ஞாயிறு மற்றும் நாளை (திங்கட்கிழமை) பக்ரீத் பண்டிகை என தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக வடமாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பிச்சாவரம் சுற்றுலா மையத்துக்கு வருகை தருகின்றனர். நேற்று மட்டும் சுமார் 1,300 பேர் வந்தனர்.

 இவர்கள் சுற்றுலாத்துறை சார்பில் இயக்கப்படும் துடுப்பு படகு, விசைப்படகுகளில் உற்சாகமாக சவாரி செய்து, மாங்குரோவ் காடுகளின் அழகை ரசித்தனர். சுற்றுலா வாகனங்கள் அதிகளவில் வந்ததால் சுற்றுலா மையத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடந்த வாரம் வெறிச்சோடி காணப்பட்ட சுற்றுலா மையம், பயணிகளின் வரவால் இந்த வாரம் களைகட்டியது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக