கடலூர்:மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜவகர்லால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. இதற்காக மாவட்டத்தில் உள்ள 8 அரசு மருத்துவமனைகளிலும் சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு காய்ச்சல் என்று வரும் நோயாளிகளை சோதனை செய்து, அதில் எத்தனை பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளது?, அவர் எந்த பகுதியில் வசித்து வருகிறார்? என்பதை கண்டறிந்து அந்த பட்டியலை சுகாதாரப்பணிகள் துணை இயக்குனரிடம் சமர்ப்பித்து வருகிறார்கள்.
அந்த பட்டியலில் உள்ளபடி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜவகர்லால் தலைமையில் மாவட்ட அளவில் செயல்படும் ‘விரைந்து நடவடிக்கை எடுக்கும் குழுவினர்’ வட்டார அளவிலான குழுக்களுடன் சென்று நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம் சபாபதி தெருவை சேர்ந்த தினகரன் என்பவருக்கு டெங்கு காய்ச்சல் நோய் அறிகுறி இருப்பது சோதனையில் தெரிய வந்தது. இதை அறிந்த சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவகர்லால் , நகராட்சி ஆணையாளர் முருகேசன், மாவட்ட மலேரியா அலுவலர் பழனிச்சாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.
அப்போது அவரது வீட்டில் காலி டப்பாவில் தேங்கி இருந்த தண்ணீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் புழுக்கள் அதிக அளவில் இருந்தது. இதையடுத்து அந்த புழுக்களை மருந்து தெளித்து அதிகாரிகள் அழித்தனர். மேலும் வீட்டுக்கு அருகில் டயர், தேங்காய் ஓடுகள் போன்ற தேவையற்ற பொருட்களை போடக்கூடாது என்று எச்சரித்தனர். தொடர்ந்து வீடு, வீடாக சென்று டெங்கு காய்ச்சல் எவ்வாறு வருகிறது? அதை எவ்வாறு ஆரம்பத்திலேயே தடுப்பது? என்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இது பற்றி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவகர்லால் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை முற்றிலும் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த காய்ச்சலை பரப்பும் கொசுக்களை அழிக்கும் முயற்சியில் கலெக்டர் உத்தரவின் பேரில் அனைத்து அதிகாரிகளும் முழு ஒத்துழைப்போடு ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
பொதுமக்கள் தங்கள் வீடுகளில் டயர், உரல், பிளாஸ்டிக் கழிவு பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் நல்ல தண்ணீரில் தான் இந்த கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. ஆகவே பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருந்தால் டெங்கு காய்ச்சலை முற்றிலும் தடுக்கலாம் என்றார்.











0 கருத்துகள்:
கருத்துரையிடுக