நெய்வேலி:நெய்வேலியில்என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக அனைத்துக் கட்சி சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.நெய்வேலி என்.எல்.சி.யில் பணிபுரிந்து வரும் சுமார் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 3-ந்தேதி இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். வேலைநிறுத்தம் நேற்றுடன் 37 நாட்களை கடந்து நீடித்து வருகிறது.
இதற்கு மத்தியில் தொழிலாளர்கள் கோரிக்கை குறித்து சென்னை, புதுச்சேரியில் நடந்த 8 கட்ட பேச்சுவார்த்தைகள், நெய்வேலியில் நடந்த 3 கட்ட பேச்சுவார்த்தைகள் என அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்து உள்ளது. ஏற்கனவே ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் விதமாக கடந்த மாதம் 23-ந்தேதி இரவு முதல் நிரந்தர தொழிலாளர்கள் விதிப்படி வேலை போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இது நிர்வாகத்திற்கு நெருக்கடி ஏற்படும் விதத்திலேயே அமைந்திருக்கிறது.
இதுபோன்ற சூழ்நிலையில், அனைத்து கட்சியினரும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்ட களத்தில் குதித்து இருக்கிறார்கள். அதன் அடிப்படையில், நேற்று என்.எல்.சி. தலைமை அலுவலகம் முன்பு அனைத்து கட்சி மற்றும் அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றால், தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படக்கூடும் எனவே இவர்களுக்கு அனுமதி அளிக்க கூடாது என்று போலீஸ் தரப்பில் நிர்வாகம் தெரிவித்ததாக தொழிற்சங்கத்தினர் கூறுகின்றனர். இதை காரணம் காட்டி போலீசும் இவர்களுக்கு அனுமதி அளிக்க மறுத்து விட்டது. இருப்பினும் போராட்டம் நடத்துவதில் அனைத்து கட்சியினர், தொழிலாளர்கள் உறுதியாக இருந்தனர்.
இருப்பினும் தொழிலாளர்கள் பெரியார் சதுக்கத்தில் இருந்து தலைமை அலுவலகத்திற்கு பேரணியாக செல்லாமல் பெரியார் சதுக்க பகுதியிலேயே ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு, அமைதியாக கலைந்து செல்ல வேண்டும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் காலை 9 மணி முதல் தொழிற்சங்கத்தினர், அனைத்து அரசியல் கட்சியினர் என சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அங்கு ஒன்று திரண்டனர். 11 மணி அளவில் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. இதற்கு தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.
இதில், திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, ம.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, அனைத்து மக்கள் விடுதலை கட்சி, மூவேந்தர் முன்னேற்ற கழகம், நாம்தமிழர்கட்சி, மற்றும் என்.எல்.சி.யில் உள்ள அனைத்து நிரந்தர தொழிலாளர்கள் சங்கங்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தினரும் கலந்து கொண்டு தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து விளக்கம் அளித்து பேசினார்கள். இதில்பங்கேற்ற ஆண்களும்,பெண்களும் பணிநிரந்தரம் செய்ய கோரி என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து கூடியிருந்த அனைவரும் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் நெய்வேலி நகரம் பரபரப்பாக காணப்பட்டது.
முன்னதாக ஆர்ப்பாட்டத்தின் போது தி.மு.க.மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியதாவது:-
என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக அனைத்து கட்சியினரும், நிரந்தர, ஒப்பந்த தொழிலாளர்களும் உணர்வு பூர்வமாக ஒன்று கூடி இருக்கின்றனர். கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சியினர் ஒன்று கூடி உள்ளதை, நிர்வாகம் கவனித்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று உடனடியாக போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்திட வேண்டும்.
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிரந்தர தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் குதிக்க இருக்கின்றனர். எனவே பிரச்சினைக்கு தீர்வு காணாமல், வெளியாட்களை பணிக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டால், கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களை அந்தந்த கிராமத்திலேயே தடுத்து நிறுத்துவார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறேன்
ஆகையால், வருகிற 13-ந்தேதிக்குள் தொழிலாளர் களின் பிரச்சினையை தீர்த்து வையுங்கள். இதுவரையில் 8 முறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்கள். அதில் ரூபாய் 5 ஊதியமாக ஏற்றுகிறது நிர்வாகம், தற்போது விலைவாசி உயர்வு என்ன நிலையில் உள்ளது? என்பதை நிர்வாகம் புரிந்து கொள்ள வேண்டும்.
தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல், அடம் பிடிப்பதால் தீவிர போராட்டத்தை நடத்தவேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம். நெய்வேலி அளவில் நடக்கும் இந்த போராட்டத்தை மாவட்ட அளவில் நடைபெறும் நிலைக்கு தள்ளிவிடாதீர்கள் என்பதை கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த 2010-ம் ஆண்டு இதேபோல் சூழ்நிலை ஏற்பட்ட போது அப்போதைய மாவட்ட கலெக்டரும், பொறுப்பில் இருந்த நாங்களும் நெய்வேலியில் முகாமிட்டு வேலைநிறுத்த போராட்டத்தை தீர்த்து வைக்க பேச்சுவார்த்தை நடத்தினோம். அதேபோல் ஒப்பந்த தொழிலாளர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்க மாவட்ட கலெக்டர் முன்வரவேண்டும்.
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிரந்தர தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு தமிழகம் பாதிக்கும் அபாயம் ஏற்படும். இந்த நிலையை போக்கிட மாவட்ட கலெக்டர் உடனடியாக நிர்வாகத்துடன் பேசி சுமூக தீர்வு ஏற்படுத்திட வேண்டும். மேற்கண்டவாறு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசினார்.
முன்னதாக என்.எல்.சி.யில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களில் ஒன்றானதொ.மு.ச. பொது செயலாளர் ராசவன்னியன் பேசுகையில், நிரந்தர தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக தேவை ஏற்பட்டால் நிரந்தர தொழிலாளர்கள் சங்கத்தினர் சார்பில் 10-ந்தேதியில்(அதாவது இன்று) வேலை நிறுத்த அறிவிப்புகள் வெளியாகும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன், என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்று திரண்டதன் காரணமாக, நெய்வேலியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதிகா தலைமையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அதோடு, ஆர்ப்பாட்டம், என்.எல்.சி. தலைமை அலுவலகத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள பெரியார் சதுக்கத்திலேயே நடைபெற்றது. இருந்த போதிலும் தலைமை அலுவலகத்திற்கு செல்லும் பாதையில் ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக ஆர்ப்பாட்டம் முடியும் வரையில் வாகனங்கள் எதையும் போலீசார் அனுமதிக்காமல், மாற்று பாதையில் திருப்பி விட்டனர். இப்போராட்டத்தினால் பெரியார் சதுக்க பகுதி ஸ்தம்பித்து போனதுடன், பரபரப்பாக காணப்பட்டது.









0 கருத்துகள்:
கருத்துரையிடுக