செவ்வாய், 14 அக்டோபர், 2014

பரங்கிப்பேட்டை உட்பட கடலூர் மாவட்டம் பயன் பெரும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் தீவிரம்


கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது. அதற்காக கிராமங்கள் தோறும் பைப் லைன் புதைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறி வருகிறது. கடல்நீர் உட்புகுந்து வருவதால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா கடலூர் மாவட்ட மக்களுக்கு கொள்ளிடம் ஆற்று நீரைக் கொண்டு
கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டசபையில் அறிவித்தார். அதன்படி இத்திட்டம் துவங்கப்பட்டு, பணிகள் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கடலோர கிராமங்களை இணைக்கும் 812 குடியிருப்புகளுக்கு இந்த கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பயன்பெற வாய்ப்பு உள்ளது. கடலூர் நகராட்சி, பரங்கிப்பேட்டை, புவனகிரி பேரூராட்சிகள் இதில் அடங்கும்.
இதற்காக இம் மாவட்டத்தின் நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய கொள்ளிடம் ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக 9 மீட்டர் விட்டமுள்ள 10 நீரூற்று கிணறுகள் அமைக்கப்படுகின்றன. இதில் ஊறும் தண்ணீரை சேமிப்பதற்காக 2 சேகரிப்பு கிணறுகள் அமைக்கப்படவுள்ளன. ஒவ்வொரு கிணறுக்கும் 100 மீட்டர் முதல் 1,000 மீட்டர் வரை இடைவெளி இருக்கும்படி கிணறுகள் தோண்டப்படுகிறது. இந்த பணிகள் 45 சதவீதம் முடிந்துள்ளன. கொள்ளிடத்தில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் மோட்டார் மூலம் பம்ப் செய்யப்பட்டு அந்தந்த கிராம குடியிருப்புகள், பேரூராட்சிகள், நகராட்சிகளுக்கு சப்ளை செய்யப்படும். ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் குடிநீர் மோட்டார், மேல் நிலைத்தொட்டி ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து செயல்படும். மத்திய அரசு சிபாரிசின்படி கிராமப் பகுதிகளுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டரும், பேரூராட்சி பகுதியில் நபர் ஒருவருக்கு 70 லிட்டரும், நகராட்சியில் வசிக்கும் நபர் ஒருவருக்கு 135 லிட்டரும் குடிநீர் வழங்கப்பட வேண்டும். ஆனால் தற்போது நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு குடிநீர் வழங்கப்படுவதில்லை. இதில் பாதியளவு குடிநீர் தான் வழங்கப்படுகின்றன. எனவே, இந்த கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டால் அதற்கான சிபாரிசு செய்யப்பட்டுள்ள முழு அளவு குடிநீரும் வழங்கப்படும். இதில் கடலோர கிராமங்கள் தோறும் பைப் லைன் பதிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலோர கிராமங்களான சுபஉப்பலவாடி, நாணமேடு, உச்சிமேடு, கங்கணாங்குப்பம் கிராமங்களில் பைப் லைன் புதைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. விரைவில் இந்த பணிகள் நிறைவேற்றப்பட்டு சிறந்த குடிநீர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக