செவ்வாய், 14 அக்டோபர், 2014

பரங்கிப்பேட்டையில் டாஸ்மாக் மதுபானக்கடையை பூட்டும் போராட்டம்

பரங்கிபேட்டை :பரங்கிபேட்டை பஸ்நிலையம், நீதிமன்றம் எதிரில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடை விற்பனை செய்வதை கண்டித்து அனைத்திந்திய மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டு பூட்டும் போராட்டம் இன்று  (14-10-2014) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது போலீஸாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் புஷ்பா, வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் அன்பரசு தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் செவ்வாய்க்கிழமை பரங்கிப்பேட்டை பஸ்நிலையம் எதிரில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுபானக்கடையை முற்றுகையிட்டு பூட்டு போட்டு பூட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.அப்போது பரங்கிப்பேட்டை போலீஸாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தையின் போது டாஸ்மாக் மதுபானக் கடையை மாற்றி அமைக்குமாறு நாங்களே (காவல்துறை சார்பில்) பரிந்துரை செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அளிக்கிறோம் என உறுதி அளித்ததின் பேரில் பூட்டு போடும் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, கடை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு பரங்கிப்பேட்டை ஒன்றிய வாலிபர் சங்க துணைச் செயலாளர் காந்தி, துணைத் தலைவர் செல்வக்குமார், மாதர் சங்க ஒன்றியத் தலைவர் பழனியம்மாள் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் அமர்நாத், துணைத் தலைவர் குமரகுரு, மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி ஒன்றியத் செயலாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, விவசாயிகள் சங்க ஒன்றிய அமைப்பாளர் கருனைச்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக