இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–
புதுமண தம்பதி
புதுச்சேரி மாநிலம் மணக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் குமார் (வயது 26). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அருகே உள்ள நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி மகள் சுபஸ்ரீ(21) என்பவருக்கும் கடந்த ஆகஸ்டு மாதம் 30–ந் தேதி திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து, குமாரும், சுபஸ்ரீயும் புதுச்சேரியில் பல இடங்களை சுற்றிப்பார்த்து மகிழ்ச்சியாக வாழ்க்கையை தொடங்கினர். மேலும், அவர்கள் புதுமண தம்பதி என்பதால் கடந்த ஒரு வாரமாக முக்கிய உறவினர்கள் வீடுகளுக்கு விருந்திற்காக சென்று வந்தனர்.
இந்நிலையில் சுபஸ்ரீயின் தாய்மாமன் புவனகிரியை சேர்ந்த வேணு என்பவர், புதுமண தம்பதியினரை விருந்திற்காக தனது வீட்டுக்கு அழைத்திருந்தார்.
அவரது அழைப்பின்பேரில் நேற்று காலை, குமார் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சிதம்பரம் அருகே உள்ள புவனகிரிக்கு சென்று கொண்டிருந்தார். அவர்கள் கடலூர் இம்பிரீயல் சாலையில் உள்ள மோகினி பாலம் அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக சாலையின் குறுக்கே திடீரென வந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் மீது மோதி புதுமண தம்பதியான இருவரும் ரோட்டில் விழுந்தனர்.
அப்போது, சற்றும் எதிர்பாராத விதமாக பின்னால் வந்த லாரி அவர்கள் மீது ஏறி, இறங்கியது. இதில் குமார் தலை மற்றும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடித்துடித்து பரிதாபமாக இறந்தார். சுபஸ்ரீ தலை, கை கால்களில் பலத்த காயமடைந்து அவரும் அதே இடத்திலேயே சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து சம்பவத்தில், மனநலம் பாதிக்கப்பட்டவர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
விபத்து காரணமாக கடலூர்–சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்தில் பலியான புதுமண தம்பதியினரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து குமாரின் வீட்டுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் இருவீட்டு உறவினர்களும், பெற்றோரும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு வந்து, குமார், சுபஸ்ரீ ஆகியோரின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது பார்ப்பவர்களின் நெஞ்சை உருக வைப்பதாக இருந்தது.
திருமணமான 46 நாட்களில் விபத்தில் புதுமண தம்பதி பலியான சம்பவம் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.









0 கருத்துகள்:
கருத்துரையிடுக