திங்கள், 13 அக்டோபர், 2014

மூளைச்சாவு அடைந்த கடலூர் மாணவி ரிஹானா உறுப்புகள் தானம்!

சென்னை: விபத்தில் மூளைச்சாவு அடைத மாணவி ரிஹானா உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஹைதர் அலி. தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி குல்பஹார். இவர்களது மூத்த மகள் ரிஹானா (21). பி.காம் பட்டதாரியான இவர் வங்கித் தேர்வு எழுத தயாராக இருந்தார்.
இந்த நிலையில் தேர்வு சம்பந்தமாக ஆடிட்டரை பார்ப்பதற்காக கடந்த 8-ம் தேதி தனியார் பேருந்தில் புதுச்சேரிக்கு புறப்பட்டுச் சென்றார். பேருந்தில் கூட்டம் அதிகம் இருந்ததால், ரிஹானா நின்றபடியே பயணம் செய்துள்ளார். பேருந்து புதுச்சேரியை நெருங்கும்போது, வளைவு ஒன்றில் பேருந்து வேகமாக திரும்பியுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக, படிக்கட்டு வழியாக வெளியே தூக்கி வீசப்பட்டார் ரிஹானா.
கீழே விழுந்த ரிஹானாவின் தலையில் பலமாக அடிபட்டு ரத்தம் கொட்டியது. மயக்கம் அடைந்த அவரை சக பயணிகள் உடனடியாக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக அன்று இரவே சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மருத்துவர்கள் ரிஹானாவுக்கு தீவிர சிகிச்சை அளித்தும், நேற்று முன்தினம் அவர் மூளைச்சாவு அடைந்தார். மருத்துவர்கள் இத்தகவலைத் ரிஹானாவின் பெற்றோருக்குத் தெரிவித்தனர். மகளின் நிலையை அறிந்து பெற்றோர் கதறி அழுதனர். எனினும் இந்த சோகமான நேரத்திலும், ரிஹானாவின் உறுப்புகளை தானம் செய்ய அவர்கள் விருப்பம் தெரிவித்தனர். உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் ரிஹானாவின் உடலில் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், கணையம், இதயம், நுரையீரல், கண்கள் ஆகியவை அகற்றப்பட்டன. தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகள் தேவையானவர்களுக்கு பொறுத்தப்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக