கடலூர்:கடலூர் நகர்மன்றத் தலைவர் சி.கே.சுப்பிரமணியன், தனது பதவியை செவ்வாய்க்கிழமை திடீரென ராஜிநாமா செய்தார்.கடலூர் நகர்மன்றத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த சி.கே.சுப்பிரமணியன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுகவைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் இரு கோஷ்டிகளாக செயல்பட்டனர்.
அதில் ஒரு கோஷ்டியினர் தலைவரை எதிர்த்து போராட்டத்தில் இறங்கினர். மேலும், துணைத் தலைவர் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அவரை எதிர்த்து தொடர்ந்து கூட்டத்தில் அமளியில் ஈடுபட்டு வந்ததால் நகர்மன்றக் கூட்டத்தை நடத்த முடியாமல் அடிக்கடி கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு வந்தது. இதனால், வளர்ச்சிப் பணிகளுக்கான தீர்மானங்களை நிறைவேற்ற முடியாமல் பல்வேறுப் பணிகள் முடங்கின.
பணிகளின் தரம் குறைத்து, ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்றும், நகர்மன்றத் தலைவரின் மகன்களின் தலையீடு அதிகளவில் உள்ளது என்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்களே குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், கடந்த வாரம் கடலூர் கெடிலம் ஆற்றில் முள்செடிகள் அகற்றும் பணியை தொடங்கி வைக்க வணிகவரித் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வந்தார். அப்போது அங்கு வந்த நகர்மன்றத் தலைவரின் மகன் சண்முகம் அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை நகராட்சி ஆணையர் ப.காளிமுத்து நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது மர்ம நபர்களால் தாக்கப்பட்டார்.
தாக்குதலுக்கு காரணமானவர்களை கைது செய்யக் கோரி நகராட்சி ஊழியர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், ஆணையர் சங்கத்தினர் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து போராட்டத்தில் குதித்ததால், கடலூர் போராட்டக் களமாக மாறியது. மேலும், தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், நகராட்சி ஊழியர்கள், ஆணையர் சங்கத்தினர் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நகர்மன்றத் தலைவர் பதவி விலகல்: இந்நிலையில், நகர்மன்றத் தலைவர் சி.கே.சுப்பிரமணியன், செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு நகராட்சி அலுவலகத்துக்கு வந்து நகரமைப்பு அலுவலர் முரளியிடம், தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தார். அதில் தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நகர்மன்றத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.
நகர அமைப்பு அலுவலர் முரளி, தலைவரின் ராஜிநாமா கடிதத்தை கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார்.
இதையடுத்து, நகர்மன்ற அவசரக் கூட்டம் புதன்கிழமை கூட்டப்பட்டு பொறுப்புத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தெரிகிறது.
நகர்மன்றத் தலைவரின் ராஜிநாமாவுக்கு அதிமுக தலைமையின் நெருக்குதலே காரணம் எனக் கூறப்படுகிறது.
பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்: இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சி வளாகத்தில் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
"ராஜிநாமா ஏன்?'
ராஜிநாமா செய்தது குறித்து நகர்மன்றத் தலைவர் சி.கே.சுப்பிரமணியத்திடம் தொலைபேசியில் கேட்டபோது, ஆணையர் காளிமுத்து நடைபயிற்சி சென்ற போது மோட்டார் சைக்கிள் மோதி கீழே விழுந்து காயமடைந்துள்ளார். இச்சம்பவத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் அன்றைய தினம் தென்மாவட்டத்தில் இருந்தேன். தகவல் கேள்விபட்டு தொலைபேசியில் மருத்துவமனைக்கு பேசி, ஆணையரை உடனடியாக சேர்த்து உரிய சிகிச்சை அளிக்குமாறு கூறினேன்.
ஆனால், இச்சம்பவத்தில் என்னையும், குடும்பத்தையும் தொடர்புபடுத்தி வருகின்றனர். பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனது குடும்பத்தை களங்கப்படுத்தி வருவதால் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். ஆதலால், பதவியை ராஜிநாமா செய்துள்ளேன். மனஅமைதியைத் தேடி பல கோயில்களுக்கு செல்ல
உள்ளேன் என்றார்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக