ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

கடலூர் நகராட்சி ஆணையர் மீது மர்ம கும்பல் தாக்குதல்


கடலூர்:கடலூர் நகராட்சி ஆணையர் சனிக்கிழமை காலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது தாக்கப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்து நகராட்சி ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடலூர் நகராட்சி ஆணையராக இருந்து வருபவர் ப.காளிமுத்து (55). இவர், கடலூர் புதுபாளையத்தில் உள்ள நகராட்சி குடியிருப்பில் வசித்து வருகிறார். தினமும் காலை இவர் தனது மகளுடன் அதே பகுதியில் நடைப்பயிற்சி செல்வது வழக்கம்.
இந்நிலையில், சனிக்கிழமை காலை காளிமுத்துவின் மகள்
கல்லூரிக்குச் சென்றுவிட்டதால், காளிமுத்து மட்டும் நடைப் பயிற்சிக்குச் சென்றார். லோகாம்பாள் கோயில் தெருவில் நடைப்பயிற்சி மேற்கொண்ட இவர் மீது மூன்று பேர் பைக்கை மோதி, கீழே தள்ளி, சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிவிட்டனர்.
இதில் பலத்த காயமடைந்த காளிமுத்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே அருகில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தவர்கள் அவரை மீட்டு கடலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரின் வலது கை மற்றும் வலது காலில் எலும்பு முறிவு எற்பட்டுள்ளதாகவும், அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காளிமுத்து, கடந்த 10 நாள்களுக்கு முன்பு தன்னை முழுமையாக பணி செய்ய விடாமல் பலர் மிரட்டுவதாக அலுவலக ஊழியர்களிடம் கூறி வந்தாராம். ஒருமுறை மிரட்டல் வந்தபோது, நகராட்சி அலுவலக வளாகத்திலேயே அமர்ந்து தர்னா நடத்தியுள்ளார். அப்போது அவரை கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சமாதானப்படுத்தினர். தொடர்ந்து இதுபோன்று மிரட்டல் வந்ததன் காரணமாக அவர் மன உளைச்சலுடன் பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
தகவல் அறிந்த நகராட்சி ஊழியர்களும், அதிகாரிகளும் மருத்துவமனை முன் திரண்டனர். இத்தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரியும் நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர், திமுக, காங்கிரஸ், பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்களும் சாலை மறியல் போராட்டத்தை அதே இடத்தில் நடத்தினர். நகராட்சி குப்பை லாரிகளைக் கொண்டு வந்து சாலையின் நடுவில் விட்டனர். இதனால், கடலூர்-புதுவை, பண்ருட்டி பகுதிக்குச் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த கடலூர் புதுநகர் போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
நகராட்சி அலுவலகம் எதிரே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் நகராட்சி ஊழியர் சங்கத்தின் சார்பில் அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் என்.காசிநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது அங்கு வந்த நகராட்சிகளின் மண்டல இயக்குநர் பிரேமா, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆணையரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பேசியுள்ளேன். மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளேன். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். போராட்டத்தை கைவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆணையரை பல்வேறு கட்சியினரும் சென்று பார்த்து நலம் விசாரித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கடலூர் புதுநகர் போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தும், இரண்டு தனிப்படைகள் அமைத்தும் விசாரித்து வருகின்றனர்.

கமிஷனர் - சேர்மன் மோதல் காரணமா?கடலுார் நகராட்சி கமிஷனர் காளிமுத்துக்கும், நகர மன்ற தலைவர் சுப்ரமணிக்கும் கடந்த சில மாதங்களாக செக் வழங்குவதில் மோதல் போக்கு இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் நகராட்சிக்கு வந்த 2 கோடி ரூபாய் பொது நிதியை, மின்கட்டணம் செலுத்தி விட்டதால் கமிஷனர் மீது, நகர மன்ற தலைவர் கோபத்தில் இருந்தார். இது தொடர்பாக அவரது மகன் ஜெ., பேரவையில் பதவி வகித்த வரும் சண்முகம், கமிஷனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த கமிஷனர் காளிமுத்து, அலுவலக அறையை விட்டு வெளியே உட்கார்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இந்நிலையில், இந்த கொலை வெறி சம்பவம் நடந்தேறியுள்ளதால், கமிஷனர் தாக்குதலுக்கு, இந்த விரோதமும் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதேபோன்று, இதற்கு முன்பு இருந்த கமிஷனர் விஜயகுமாருக்கும், நகர மன்ற தலைவருக்கும் மோதல் இருந்ததால், பாதுகாப்பு கோரி கடலுார் புதுநகர் போலீசில், கமிஷனர் விஜயகுமார் புகார் மனு கொடுத்தார்.அதனைத் தொடர்ந்து, சென்னையில் அமைச்சர்கள் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. இதற்கிடையே, அவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மாற்றப்பட்டு காளிமுத்து கடலுார் நகராட்சி கமிஷனராக கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக