சனி, 30 ஆகஸ்ட், 2014

குவைத்தில் 25 இந்திய தொழிலாளர்கள் கொலை வழக்கில் கைது

குவைத் :குவைத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில், 2 எகிப்தியர்கள் கொல்லப்பட்டனர். இந்த மோதல் தொடர்பாக 25 இந்திய தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குவைத் ஒட்டக சந்தை அருகே கபாத் என்ற இடத்தில் இந்திய தொழிலாளர்களுக்கும். எகிப்து தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 2 எகிப்தியர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக 25 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மோதலில் காயம் அடைந்த இந்தியர்கள் 15 பேர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதலை அடுத்து இந்திய தொழிலாளர்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக குவைத் அரசுடன் தொடர்பில் உள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குவைத் அரசிடம் இவ்விவகாரத்தை இந்திய அரசு எடுத்து சென்றுள்ளது என்றும் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இந்தியர்களை தூதரக அதிகாரிகள் சந்தித்து பேசியுள்ளனர். என்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையத் அக்பரூதின் தெரிவித்துள்ளார். காயம் அடைந்தவர்கள் இந்திய தூதரக அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று பார்த்தனர் என்றும் யாருக்கும் ஆபத்தான காயங்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், குவைத்தில் இந்தியர்களுக்கு உதவி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
குவைத்தில் 750,000 இந்தியர்கள் வாழ்கின்றனர். அவர்கள் நன்கு மரியாதையுடன் நடத்தப்படுகின்றனர். ஒரு குறிப்பிட்ட பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு குவைத் வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. உள்ளூர் சட்டங்கள் மற்றும் விதிகளை இந்தியர்கள் பின்பற்ற வேண்டியது கட்டாயம். தொழிலாளர்கள் பணி நிறுவனத்தின் மேலாண்மையை தொடர்பு கொண்ட தூதரகம், இந்தியர்கள் உள்ள முகாம்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை தேவைகளை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இந்திய தூதரக அதிகாரிகள் தொழிலாளர்களுடன் பேசியுள்ளனர் என்றும் ஆறுதல் கூறியுள்ளனர் என்றும் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து இந்திய தூதரகம் குவைத் வெளியுறவு அமைச்சகத்தை தொடர்பு கொண்டு பேசியது. இந்திய தொழிலாளர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மத்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக