வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து தொடர்ந்து புதுப்பித்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்ற மனுதாரர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பெறாதவர்கள், மேல்நிலை வகுப்பு தேர்ச்சி, பட்டயப்படிப்பு தேர்ச்சி மற்றும் பட்டப் படிப்பு, முதுகலைப் பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியுடையவராவர்.
விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் மாதம் ஒன்றுக்கு 4,000 ரூபாய்க்கு அல்லது ஆண்டொன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது. ஆதி திராவிடர், பழங்குடியினர் 45 வயது மற்றும் இதர வகுப்பினர் 40 வயது பூர்த்தி அடைந்திருக்கக் கூடாது.
அரசு மற்றும் தனியார் துறையில் எந்த விதமான ஊதியம் பெறும் பணியிலோ அல்லது சுயவேலை வாய்ப்பில் ஈடுபட்டவராகவோ இருத்தல் கூடாது. தனியாரிடமிருந்தோ அல்லது அரசிடமிருந்தோ வேறு எந்த வகையிலும் உதவித்தொகை பெறுபவராக இருத்தல் கூடாது.
அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவ, மாணவியராக இருத்தல் கூடாது. இத்திட்டத்தில் ஏற்கெனவே பயன் பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கக் கூடாது. இதுகுறித்து மேலும், விவரம் வேண்டுவோர் வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளார்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக