ஞாயிறு, 6 ஜூலை, 2014

பாரபட்சமின்றி நிதி ஒதுக்கியுள்ளேன் : பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ.


பரங்கிப்பேட்டை: "எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் இருந்து வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் நிதி ஒதுக்கி கொடுத்து வருகிறேன்'' என பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., பேசினார்.
பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட அகரம், வண்ணாரப்பாளையம், சின்னக்கடை உள்ளிட்ட இடங்களில் சிதம்பரம் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா 4 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மூன்று ரேஷன் கடைகள் திறப்பு விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் நடராஜன், செயல் அலுவலர் கலைப்பாண்டி முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் பொற்செல்வி கணேசன் வரவேற்றார்.
முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் செழியன், முன்னாள் நகர தி.மு.க., செயலர் பாண்டியன், வழக்கறிஞர் தங்கவேல், ஒன்றிய பிரதிநிதி கோமு, கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
புதிய ரேஷன் கடைகளை பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., திறந்து வைத்து பேசியதாவது: ரேஷன் கடைகள் பொதுமக்களுக்கு அத்தியவாசியமான ஒன்றாகி விட்டது. பெரும்பாலான கடைகள் தனியார் வீடுகளில் வாடகையில் செயல்படுகிறது. குறைந்த வாடகைக்கு ரேஷன் கடைகள் இயங்குவதால் வீட்டு உரிமையாளர்கள் ரேஷன் கடைகளை காலி செய்யச் சொல்கின்றனர். இதனால், பல இடங்களில் ரேஷன் கடை நடத்த முடியாத நிலை உள்ளது. சட்டசபை மேம்பாட்டு நிதியில் இருந்து எம்.எல்.ஏ., நினைத்தால் எந்த வேலைக்கும் நிதி ஒதுக்கி தரலாம் என பொதுமக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அப்படியெல்லாம் முடியாது.
அரசு ஒவ்வொரு ஆண்டும் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதிக்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தருகிறது. அதில் ஒரு கோடியே 22 லட்சத்திற்கு அரசு சொல்லும் பணிகளுக்குதான் நிதி ஒதுக்கிதர முடியும். மீதியுள்ள 78 லட்சத்திற்குதான் இதுபோல் ரேஷன் கடைகள், சாலை வசதி என நிதி ஒதுக்க முடியும். சிதம்பரம் சட்டசபை தொகுதியில் வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என யாருக்கும் பாரபட்சம் இல்லாமல்தான் நிதி ஒதுக்கி தந்துள்ளேன். இவ்வாறு பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., பேசினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக