புதன், 9 ஜூலை, 2014

தனியாருக்கு தாரை வார்க்கப்படும் ரெயில்வே! புறக்கணிக்கப் பட்ட தமிழகம்

புதுடெல்லி: இந்திய ரெயில்வேத் துறையை தனியாருக்கு தாரைவார்க்கும் திட்டங்கள் அடங்கிய முதல் பட்ஜெட்டை மோடி அரசு தாக்கல் செய்துள்ளது.
ரெயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் சொந்த மாநிலமான கர்நாடகா, மோடியின் சொந்த மாநிலமான குஜராத், சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கும் மஹராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களுக்கு மட்டும் ரெயில்வே பட்ஜெட்டில் அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க அரசின் காவி மயமாக்கல் திட்டம் ரெயில்வே பட்ஜெட்டிலும் பிரதிபலித்துள்ளது. சங்க்பரிவார் கொண்டாடும் ராமகிருஷ்ணா மிஷன் ஸ்தாபகர் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையையும்,உபதேசங்களையும் பரப்புரைச் செய்ய சிறப்பு ரெயில் விடப்படும் என்று சதானந்த கவுடா தெரிவித்தார்.
அண்மையில் ரயில்வே கட்டணங்கள் உயர்த்தப்பட்டதால், பட்ஜெட்டில் பயணிகள் மற்றும் சரக்கு கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. ரயில்வே உள்கட்டுமானப் பணிகளில், இந்திய தனியார் நிறுவனங்கள் மற்றும் நேரடி அன்னிய முதலீட்டுக்கு வழிவகுப்பது, அரசு -தனியார் ஒத்துழைப்புடன் நஷ்டத்தில் செயல்படும் ரயில்வேயின் நிதி ஆதாரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.இதன் மூலம் ரெயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் நரேந்திரமோடி அரசின் திட்டம் வெளிப்பட்டுள்ளது.
மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்றபிறகு தாக்கல் செய்யப்படும் முதல் ரயில்வே பட்ஜெட் இதுவாகும். அதன்படி மக்களவையில் ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கௌடா ரயில்வே பட்ஜெட்டை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
 நாடு முழுவதும் 58 புதிய ரயில்கள் விடப்படும். அதில் 27 எக்ஸ்பிரஸ் ரயில்கள், 5 ஜன்சாதாரண் ரயில்கள், 5 பிரீமியம் ரயில்கள், 6 ஏ.சி. எக்ஸ்பிரஸ் ரயில்கள், 8 பயணிகள் ரயில்கள் அடங்கும். இதுதவிர 11 ரயில்களின் தூரம் நீட்டிக்கப்படும். மும்பையில் அடுத்த 2 ஆண்டுகளில் கூடுதலாக 864 புறநகர் மின்சார ரயில்கள் விடப்படும்.
புல்லட் ரயில்: மும்பை- ஆமதாபாத் இடையே புல்லட் ரயில் விடப்படும். நாட்டின் முக்கிய பெருநகரங்கள் மற்றும் வளர்ச்சி மையங்களை இணைக்கும் வகையில் வைர நாற்கர திட்டம் ஏற்படுத்தப்படும். இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்கும் பணிக்காக ரூ.100 கோடி ஒதுக்கப்படும்.
 நாட்டில் உள்ள குறிப்பிட்ட 9 பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோ மீட்டர் முதல் 200 கிலோ மீட்டர் வேகம் வரை ரயில்கள் இயக்கப்படும். கடந்த 2013-2014ஆம் நிதியாண்டில் ரயில்வே வருமானம் குறைந்துள்ளது. அதேசமயம் செலவினங்கள் அதிகரித்துள்ளன. ரயில்வேயில் 2013-2014ஆம் நிதியாண்டில் ரூ.1,39,558 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இது எதிர்பார்த்த தொகையைவிட ரூ.942 கோடி குறைவாகும். சாதாரண வேலைகளுக்கான செலவினங்களும், ஓய்வூதியமும் அதிகரித்திருந்தன.
 2014-2015ஆம் நிதியாண்டில், 1,101 மில்லியன் டன் சரக்கு கையாள திட்டமிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 51 மில்லியன் டன் அதிகமாகும். இதன்மூலம் ரூ.1,05,770 கோடி வருமானம் கிடைக்கும். எனினும், மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளுக்கு வழங்கப்படும் சலுகையால் ஏற்படும் இழப்பு ரூ.610 கோடியை தவிர்த்து, பயணிகள் மூலம் ரூ.44,645 கோடி வருமானம் கிடைக்கும். மொத்தத்தில் 2014-2015ஆம் நிதியாண்டில், ரயில்வேக்கு ரூ. 1,64,374 கோடி வருமானம் கிடைக்கும். அதில் ரூ.1,49,176 கோடி பல்வேறு திட்டங்களுக்காக செலவிடப்படும்.
 தங்க நாற்கர திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ரூ.9 லட்சம் கோடிக்கும் அதிகமாக அரசுக்கு நிதி தேவைப்படுகிறது. குறிப்பாக ஒரு புல்லட் ரயிலை அறிமுகப்படுத்துவதற்கு மட்டுமே அரசுக்கு ரூ.60,000 கோடி நிதி தேவைப்படுகிறது. பயணிகள் கட்டணங்கள், சரக்கு கட்டணங்களை உயர்த்தி, பொது மக்களை துன்பத்தில் ஆழ்த்துவதன் மூலம் இந்த நிதியை திரட்ட விரும்பவில்லை. அது சாத்தியமும் கிடையாது. ஆதலால், மாற்று வழியில் தேவையான நிதி திரட்டும் வகையில், புதிய திட்டம் அறிவிக்கப்படும்.
 ரயில்வே உள்கட்டுமானப் பணியில், இந்தியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் மற்றும் நேரடி அன்னிய முதலீட்டுக்கு வழிவகுக்கப்படும். ஏனெனில் ரயில்வே துறை வளர்ச்சி என்பது, உள்கட்டுமானப் பணிகளில் மேற்கொள்ளப்படும் முதலீட்டையே அதிக அளவில் சார்ந்துள்ளது.
 
அன்னிய நேரடி முதலீடு: ரயில்வேக்கு பல்வேறு வழிகளில் கிடைக்கும் வருமானம், அரசு அளிக்கும் நிதி ஆகியவற்றால், ரயில்வேயின் தேவையை நிறைவேற்ற முடியாது. ஆகையால் ரயில்வேயில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கு, மத்திய அமைச்சரவையிடம் ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் கோரியுள்ளது. ரயில்வே உள்கட்டுமான பணியில் மட்டுமே, அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும். பிற பணிகளில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட மாட்டாது.
எதிர்காலத்தில் ரயில்வேயில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய திட்டங்கள் அனைத்தையும், அரசு – தனியார் பங்களிப்புடன் மேற்கொள்வதே எங்களது குறிக்கோளாகும். அதில், புல்லட் ரயில் இயக்கும் திட்டமும் ஒன்றாகும்.
வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்று வரும் 11 ரயில்வே பணிகளுக்கு பட்ஜெட்டில் ரூ.5,116 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஜம்மு-உதம்பூர் இடையேயான ரயில் சேவை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பனிவால்- கட்ரா இடையேயான ரயில்வே பணியையும் நிறைவேற்ற வேண்டியுள்ளது.
18 புதிய வழித்தடங்களில் ரயில்கள் விடப்படும். இதில், கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களுக்கு ரயில்கள், ஷிமோகா-சிருங்கேரி-மங்களூர் இடையே ரயில் உள்ளிட்டவை அடங்கும். 5 பிரீமியம் ரயில்கள், மும்பை சென்ட்ரல்-புது தில்லி, சாலிமர்-சென்னை, செகந்திராபாத்- ஹஜ்ரத் நிஜாமுதீன், ஜெய்ப்பூர்-மதுரை, காமாக்யா- பெங்களூர் இடையே இயக்கப்படும் என்று சதானந்த கௌடா தெரிவித்தார்.
மும்பை-ஆமதாபாத் புல்லட் ரயில்:  ரூ.54 ஆயிரம் கோடி திட்டம்
மும்பை-ஆமதாபாத் இடையிலான புல்லட் ரயில் சேவை திட்டத்தின் மதிப்பீடு ரூ.54 ஆயிரம் கோடி என உலக வங்கியின் சர்வதேச ஜப்பான் கூட்டுறவு சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த புல்லட் ரயில் திட்டத்துக்கான கடனை உலக வங்கியிடம் இருந்து பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. மும்பை-ஆமதாபாத் இடையே உள்ள 534 கிலோ மீட்டர் தூரத்தை புல்லட் ரயில் 350 கிலோ மீட்டர் வேகத்தில் கடக்கும். இதற்கு பிரத்யேகமான வழித்தடம் அமைக்கப்படும். ஒரு கிலோ மீட்டருக்கான புல்லட் ரயில் வழித்தடம் அமைக்க ரூ.100 கோடி செலவாகும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தி முடிக்க 10 ஆண்டுகளாகும் என்றும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்துக்கு 5 புதிய ரயில்கள்: 2 பிரீமியம், 2 எக்ஸ்பிரஸ்
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2014-2015-ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு 5 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மேற்கு வங்க மாநிலம் ஷாலிமார்-சென்னை சென்ட்ரல், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர்-மதுரை இடையே பிரீமியம் ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
 மேலும், குஜராத் மாநிலம் ஆமதாபாத்-சென்னை இடையே வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயில், ஆந்திர மாநிலம்-சென்னை இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை இயக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்திற்கு ஐந்து புதிய ரயில்கள் என்ற அறிவிப்பு நாம் சந்தோஷம் பட வேண்டிய அளவிற்கு ஒன்றும் இல்லை .....
...
காரணம் மத்திய அரசு தமிழகம் என்பதை சென்னை மட்டுமே என்று நினைத்து விட்டது போல தமிழகத்தில் உள்ள ஏனைய மாவட்டங்கள் மாநகராட்சிகள் , வளர்ந்து வரும் நகராட்சிகள் அவர்கள் கண்களுக்கு தெரியவில்லையா ???

மத்திய அரசு அறிவித்த ஐந்து ரயில்களும் சென்னையை மையப்படுத்தியும் , சென்னை வழியாக அண்டை மாநிலங்களுக்கு செல்லக்கூடிய ரயில்கள் இதில் புல்லட் ரயிலும் அடக்கம் இதில் ஒட்டுமொத்த தமிழக மக்களும் பயன்படக்கூடிய அறிவிப்பு ஒன்றும் இல்லை ..

மேலும் wifi. எனப்படும் கம்பியில்லா தண்டு வட சேவை என்பது அன் ரிசர்வ் கம்பார்ட் மெண்டில் நிற்க கூட வழி இல்லாமல் பயணம் செய்யும் ஏழை எளிய மக்களுக்கும். விவசாயிகளுக்கும் எந்தவித நன்மைகளும் இல்லை ...

போக்குவரத்து துறையை ஒப்பிடுகையில் ரயில்வேக்கட்டணம் மிக குறைவு என்று கூறுவது பொறுப்பற்ற சொல் 60 நபர்களை சுமந்து செல்லும் பேருந்தும் ஆயிரத்திற்கும் அதிகமாக மக்களை சுமந்துகொண்டு செல்லும் ரயிலும் ஒன்றா ????

மேலும் ரயில்வே துறை என்பது மக்களுக்கு சேவை செய்யும் ஒரு துறையே அதை தற்போது சேவை என்ற சொல்லை மாற்றி வியாபார நோக்கத்துடன் தனியார் மயத்திற்கு அனுமதி அளிப்பது என்பது மேலும் விலை உயர்வுக்கு வழி வகுக்கும் ..
 சுற்றுலா ரயில்: ஆன்மிக சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் ராமேசுவரத்தில் இருந்து பெங்களூரு, சென்னை, அயோத்தி, வாராணசி, ஹரித்வார் ஆகிய இடங்களை இணைக்கும் ரயில் இயக்கப்படவுள்ளது.
மேலும், மைசூரு-பெங்களூரு-சென்னை, சென்னை-ஹைதராபாத் வழித்தடங்களில் 160 முதல் 200 கி.மீ. வரை வேகம் உயர்த்தப்பட்டு அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில்களாக இயக்கப்படும்.
மேல்மருவத்தூர், வேளாங்கண்ணி: மேல்மருவத்தூர் மற்றும் வேளாங்கண்ணி கோயில்களுக்கு திருவிழா மற்றும் பண்டிகை காலங்களின்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
4,000 பெண் பாதுகாவலர்கள்
ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக, மகளிர் போலீஸ் பணிக்கு புதிதாக 4,000 மகளிர் தேர்வு செய்யப்படுவர். ஏற்கெனவே ரயில்வே காவலர் பணிக்கு 17,000 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.விரைவில் அவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
நாடு முழுவதும் ரயில்வே தண்டவாளங்களை மாற்றி புதுப்பிக்கும் பணி, ஆளில்லா ரயில்வே கிராசிங்குகளை அகற்றுதல், ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்க பாலங்கள் அமைப்பதற்கு ரூ.40,000 கோடி தேவைப்படுகிறது. இதில், ரயில்வே மேம்பாலங்கள், சுரங்கப் பாலங்கள் அமைப்பதற்கு ரூ.1,785 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இ-டிக்கெட் முறை புதுப்பிப்பு
ரயிலில் பயணம் செய்ய இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் இ-டிக்கெட் முறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய முறை மூலம், ஒரு நிமிடத்துக்கு 7,200 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். மேலும், ஒரே நேரத்தில் இ-டிக்கெட் முன்பதிவுக்காக 1,20,000 பேர் வரை அணுக முடியும். ரயில்வே துறையில் அடுத்த 5 ஆண்டுகளில், காகிதங்களின் பயன்பாடு இல்லாத நிலை ஏற்படுத்தப்படும். ஏ-1 மற்றும் ஏ-2 பிரிவு ரயில் நிலையங்களிலும், குறிப்பிட்ட ரயில்களிலும் வை-ஃபை வசதி ஏற்படுத்தப்படும். ரயில்களின் வருகை நேரம் குறித்து பயணிகளின் செல்போனுக்கு தகவல் அனுப்புவது, ரயில்கள் எந்தப் பகுதியில் வருகிறது என்பதை அறிந்து கொள்ளும் வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும்.
உணவு வசதி
ரயில் பயணிகளுக்கு சிறந்த உணவு உள்ளிட்டவற்றை வழங்கும் வகையில், குறிப்பிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகளில் உருவான உணவுகள் ஓடும் ரயில்களில் வழங்கப்படும். முக்கிய ரயில் நிலையங்களில் உணவு வளாகங்கள் அமைக்கப்படும். உணவின் தரம் குறித்து பயணிகள் தங்களது கருத்துகளை தெரிவிக்க வசதி செய்து தரப்படும்.
பயணிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வசதியாக ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் சோதனை முறையில் ஆர்.ஓ. (ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்) குடிநீர் சுத்திகரிப்பு வசதி அமைக்கப்படும். முக்கிய ரயில்நிலையங்கள் அனைத்திலும், நடைபாதை மேம்பாலம், எஸ்கலேட்டர், லிஃப்டுகள் அமைக்கப்படும். முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள அனைத்து நடைமேடைகளிலும், தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி செய்து தரப்படும்.
சுத்தப்படுத்தும் பணி
ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களை சுத்தமாக வைத்திருப்பதற்கும், சிறந்த வசதியை அளிப்பதற்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
சுத்தப்படுத்தும் பணிக்காக மட்டும் தனி மூலதனம் ஏற்படுத்தப்படும். ரயில் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம், சுத்தப்படுத்தும் பணி கண்காணிக்கப்படும்.
ரயில் நிலையங்களை சுத்தப்படுத்தும் பணி, சுகாதார பணிக்காக மட்டும் தனியாக ஒரு பிரிவு ஏற்படுத்தப்படும்.
இதுதவிர ஓடும் ரயில்களில் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், பிற முக்கிய ரயில்களிலும் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
ரயில் நிலையங்களை சுத்தமாக பராமரிக்கும் பணியில், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர், பெரு நிறுவனத்தினர் ஊக்குவிக்கப்படுவர்.
பயணிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்
பயணிகளின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். இதற்காக ரயில் விபத்துக்கான காரணங்களை கண்டறியவும், சர்வதேச அளவுக்கு பாதுகாப்புத் திறனை உறுதி செய்வதற்கும் மையம் ஒன்று அமைக்கப்படும். முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்கள், புறநகர் ரயில்களில் கதவுகள் தானாக மூடிக்கொள்ளும் வசதி செய்து தரப்படும்.
ரயில்வேயில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக, ரயில்களில் பயன்படுத்தப்படும் மொத்த டீசல் அளவில் பயோ-டீசல் 5 சதவீதம் அதிகரிக்கப்படும். ரயில் தண்டவாளங்கள், நடைமேடைகளில் கிடக்கும் மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை தவிர்க்க ரயில்களில் பயோ-கழிப்பறைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக