புதன், 9 ஜூலை, 2014

வாக்காளர்களுக்கு இனி வண்ண அட்டைகள்: இம்மாத இறுதியில் வழங்க ஏற்பாடு

சென்னை :தமிழகத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்கும் பணி இம்மாதம்இறுதியில் தொடங்குகிறது.
புதிய வாக்காளர்கள்
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக வாக்காளர் சேர்ப்புக்காக சிறப்பு முகாம்களை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தியது. இதன் மூலம் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை.
தமிழகத்தில் இனி வழங்கப்படும் அடையாள அட்டைகளை கலர் அட்டைகளாக வழங்க இந்திய தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இந்த அட்டைகளை தயாரிப்பதற்கான கம்பெனிகளின் டெண்டர் கோரப்பட்டு இருந்தது. இறுதியில் ஒரு நிறுவனத்தை தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
இந்த அட்டைகள் தயாரிக்கப்பட்டு அவற்றை வழங்கும் பணி இம்மாத இறுதியில் தொடங்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
செலவு கணக்கு
தமிழகத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் 845 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரும் அதிகபட்சம் ரூ.70 லட்சம் வரை செலவழிக்கலாம் என்று உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டது. அந்த தொகைக்கு மேல் செலவழித்தால் அது, தேர்தல் விதிமுறையை மீறியதாக அமைந்துவிடும்.
வேட்பாளர்கள் அனைவரும் ஜூன் 15-ந் தேதிக்குள் தேர்தல் செலவு கணக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கூறியிருந்தது. 748 பேர் மட்டும் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்தனர். 97 பேர் செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை.
வேட்பாளர்கள் தாக்கல் செய்த செலவு கணக்கு விவரங்களை, இந்திய தேர்தல் கமிஷனிடம் தமிழகத்துக்கான தேர்தல் செலவீன பார்வையாளர்கள் ஒப்படைத்துள்ளனர். அவற்றை தேர்தல் கமிஷன் சரிபார்த்து வருகிறது.
ஒருவர் மட்டும் அதிக செலவு
சில வேட்பாளர்கள் தாக்கல் செய்த செலவு கணக்கில், செலவீன பார்வையாளர்கள் கணித்த தொகைக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வித்தியாசம் வருவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஒரேயொரு வேட்பாளர் மட்டும் ரூ.70 லட்சத்துக்கும் மேலாக தேர்தல் செலவு செய்ததாக தெரிய வந்துள்ளது. இதற்கு அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என்று கூறப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக