சனி, 5 ஜூலை, 2014

கடலூர் சிப்காட் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து

கடலூர் :கடலூர் சிப்காட் வளாகத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியது.

 கடலூர்முதுநகர் அருகே சிப்காட் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் செம்மங்குப்பத்தில் அக்னி ஏவுகணை ராக்கெட்டிற்கு தேவையான எரிபொருள்கள் தயாரிக்கும் தனியார் ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை இந்திய அரசின் பாதுகாப்பு துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு 30 தொழிலாளர்கள் பணியில் உள்ளனர்.

இந்த தொழிற்சாலையில் ராக்கெட் மற்றும் ஏவுகணைக்கு தேவையான எரிபொருளான அம்மோனியம் பர்குளேரேட் என்ற ரசாயனம் தயாரிக்கப்படுகிறது. இந்த ரசாயன தயாரிப்பில் இறுதி கட்டமாக அம்மோனியம் பர்குளேரேட் என்ற ரசாயனம் ஒரு பெரிய இயந்திரத்தின் மூலம் உலர வைக்கப்படும்.

அவ்வாறு நேற்று இந்த தொழிற்சாலையில் ரசாயனத்தை உலர வைக்கும் போது, அம்மோனியம் பர்குளேரேட் திடீரென தீப்பிடித்தது. அது, எரியும் மூலப்பொருள் என்பதால் தீ குபீரென பெரிய தீப்பிழம்பாக கிளம்பி எரிய தொடங்கியது.


 அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்து தொழிற்சாலையை விட்டு வெளியேறினர். பின்னர், தொழிற்சாலையில் உள்ள ஊழியர்கள் தீயணைப்பு கருவி மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையே சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் கருணாகரன் தலைமையில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

ரசாயனத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் துர்நாற்றம் வீசியது. மேலும், இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த சிமெண்ட் மேற்கூரை, ஜன்னல் உள்ளிட்ட பொருட்களும், உலர வைத்த அனைத்து ரசாயன பவுடரும் எரிந்து நாசமானது. இதன் சேதமதிப்பு சுமார் ரூ.10 லட்சமாகும்.


 இது குறித்து தகவல் அறிந்த கடலூர் உதவி கலெக்டர் ஷர்மிளா, மாசுக்கட்டுப்பாட்டு துறை என்ஜினீயர் ராஜா, கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, கடலூர்முதுநகர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு, விபத்து குறித்து விசாரணை நடத்தினர். மேலும், இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.


இந்த விபத்து நடந்த போது ஏற்பட்ட சத்தத்தை பக்கத்து கிராமங்களை சேர்ந்த மக்கள் உணர்ந்தனர். மேலும், அந்த தொழிற்சாலை முன்பு ஏராளமான பொது மக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தீவிபத்து குறித்து தொழிற்சாலை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த தொழிற்சாலையில் ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை விண்ணில் செலுத்துவதற்கு தேவையான எரிபொருளான அமோனியம் பர்குளேரேட் என்ற ரசாயனம் தயாரிக்கப்படுகிறது. இந்த ரசாயனம் தீப்பற்ற வைத்தால் தீப்பிழம்புகள் கக்கும் திறன் கொண்டது. ஆனால், தற்போது எப்படி? இந்த விபத்து நடந்தது என்பது தெரியவில்லை. இருப்பினும், உலர வைக்கும் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து நடந்திருக்க வாய்ப்பு உள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். என்றார்.

இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் அருள் கூறுகையில், இந்த அமோனியம் பெர்குளோரைட் எளிதில் தீப்பற்றக் கூடிய வேதிப்பொருள், இதனை கவனக்குறைவாக கையாண்டு விபத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
அமோனியம் பெர்குளோரைட் நீரில் கலந்தால், அந்த நீரை பயன்படுத்த முடியாது. குடியிருப்புப் பகுதி அருகே அமைந்துள்ள இந்த ஆலையில் இருந்து கழிவுகள் வெளியேறி நீர்நிலைகளை மாசுபடுத்த வாய்ப்புள்ளது. மாசுபட்ட நீரை தெரியாமல் பயன்படுத்தும் மக்களுக்கு பல்வேறு நோய்கள் வர வாய்ப்புள்ளது.
குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சியின்மை நோய் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் ஆலையில் கழிவுகளை வெளியேற்றும் விதம் குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, விவரங்களை அப்பகுதி மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக