சனி, 5 ஜூலை, 2014

ஒரு வழிப்பாதையாகிறது கடலூர் அண்ணா பாலம்

கடலூர் :சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட இருப்பதால், கடலூர் அண்ணா பாலம் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட உள்ளது.
கடலூர் நகரில் கெடிலம் ஆற்றின் குறுக்கே காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மேம்பாலம் இப்போது அண்ணா மேம்பாலம் என அழைக்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் இருந்த இந்த பாலம், தேசிய நெடுஞ்சாலை வசம் சென்றது.
இதன் பிறகு பாலத்தை முறையாக பராமரிக்காததால், பாலத்தில் அனைத்து இணைப்புகளும் (எக்ஸ்பேன்ட் ஜாயின்ட்) உடைந்து பெரிய பள்ளங்களாக மாறியுள்ளன.
இதனால், பாலத்தைக் கடந்து செல்லும் வாகனங்கள் இந்த பள்ளங்களில் விழுந்து செல்வதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. உள்ளூரைச் சேர்ந்த வாகன ஓட்டிகள், பாலத்தின் நிலையை அறிந்து மெதுவாகச் சென்று விடுகின்றனர்.
ஆனால் வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள், வேகமாக வருவதால், பள்ளங்களில் சிக்கி விபத்து அதிகரித்து வருகிறது.
இதனால் இந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, பாலத்தை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முன் வந்துள்ளது. இந்த பணிகள் வரும் 10-ம் தேதிக்குப் பிறகு தொடங்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், கடலூர் நகரில் உள்ள பொதுநல அமைப்புகள், போக்குவரத்துத் துறை அதிகாரிகள், லாரி, பேருந்து, வேன், ஆட்டோ உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளை கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அழைத்த கோட்டாட்சியர் மோ.ஷர்மிளா, பாலம் சீரமைப்புப் பணி தொடங்க இருப்பதால், பாரதி சாலை வழியாக பேருந்து நிலையம் செல்லும் வாகனங்கள் மட்டுமே அண்ணா பாலம் வழியாக அனுமதிக்கப்படும்.
பேருந்து நிலையத்திலிருந்து, புதுச்சேரி, நெல்லிக்குப்பம் செல்லும் வாகனங்கள் ஜவான் பவான் சாலையைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த பாலம் சீரமைப்புப் பணிகள் நிறைவடைய 45 நாள்கள் ஆகலாம் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பாலம் சீரமைப்புப் பணிகளுக்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கோட்டாட்சியர் கேட்டுக் கொண்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக