வியாழன், 17 ஜூலை, 2014

மாணவி கொலைச் சம்பவம்: கொத்தனார் கைது

பரங்கிப்பேட்டை:கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே ஓடையில் மாணவி கொலை செய்யப்பட்டுக் கிடந்த வழக்கில், அதேப் பகுதியைச் சேர்ந்த கொத்தனார் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து, கடலூர் எஸ்பி ஏ.ராதிகா சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
சிதம்பரம் அருகே கிள்ளை கடலோரப் பகுதியில் கடந்த 10ஆம் தேதி பள்ளி மாணவியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. மாணவியின் சுடிதாரில் பொறிக்கப்பட்டிருந்த தையல் கடை முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை வைத்து அந்தத் தையல்காரர் சீர்காழி பகுதியைச் சேர்ந்தவர் எனக் கண்டறியப்பட்டது. இதையடுத்து கடலூர் மற்றும் நாகை மாவட்ட போலீஸார் இணைந்து இரு மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளில் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, நாகை மாவட்டம் காரைமேடு பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் கடந்த ஜூலை 3ஆம் தேதியிலிருந்து பள்ளிக்கு வரவில்லை என்பதை அறிந்து அவரது ஊருக்குச் சென்று மாணவியின் சடலம் மற்றும் ஆடைகள் கொண்ட படத்தை காண்பித்து விசாரிக்கப்பட்டது.
அப்போது அந்த மாணவியின் பெரியம்மா மகள் ஜெயபாரதி, அந்த ஆடை தன்னுடையது என்றும், தனது சித்தியின் மகள் கௌசல்யாவுக்கு கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஜெயபாரதியை சிதம்பரத்துக்கு அழைத்து வந்து மாணவியின் உடல் மற்றும் ஆடைகளை வைத்து அம்மாணவி கௌசல்யாதான் என்பதை உறுதி செய்தோம்.
மாணவி கௌசல்யா நாகை மாவட்டம், தென்னலக்குடியைச் சேர்ந்த திருக்கார்த்திகேயன்-பழனியம்மாள் தம்பதி மகள் எனத் தெரியவந்தது. கௌசல்யா காரைமேடு ஆதிதிராவிடர் நல அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நாகை மாவட்டம், பழையாறு கிராமத்தில் கொத்தனார் வேலை பார்க்கும் போது, மாணவியின் தாய் பழனியம்மாளுக்கும் சிதம்பரம், எம்ஜிஆர் திட்டைச் சேர்ந்த கொத்தனார் ஜான் என்கிற அன்புதாஸýக்கும் (38), தொடர்பு ஏற்பட்டு பழகி வந்துள்ளனர். அன்புதாஸýக்கு ஏற்கெனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் பழனியம்மாள் தனது மகள் கௌசல்யாவை எங்காவது அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்ளுமாறு அன்புதாஸýடன் கடந்த ஜூலை 3ஆம் தேதி அனுப்பி வைத்துள்ளார்.
இருவரும் கடலூர் மற்றும் பல்வேறு இடங்களில் விடுதியில் தங்கியிருந்துவிட்டு, ஜூலை 10ஆம் தேதி எம்ஜிஆர் திட்டிற்கு வந்துள்ளனர். அப்போது அன்புதாஸýக்கு ஏற்கெனவே திருமணம் ஆனது கௌசல்யாவுக்கு தெரியவந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த அன்புதாஸ் கட்டையால் தலையில் தாக்கியதில் கௌசல்யா இறந்துள்ளார். பின்னர் அவரது சடலத்தை ஓடையில் போட்டுவிட்டு தலைமறைவானது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அண்ணாமலைநகர் போலீஸார் அன்புதாûஸ புதன்கிழமை சிதம்பரம் அருகேயுள்ள பொன்னந்திட்டில் கைது செய்தனர் என்றார் எஸ்.பி. ராதிகா. அவர் மேலும் கூறுகையில், பெண் காணவில்லை என்றால் அவர்களது பெற்றோர் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் செய்ய முன்வர வேண்டும். அப்போதுதான் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு குற்றங்களை தடுக்க முடியும் என்றார்.
டிஎஸ்பி ஆர்.ராஜாராம், அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக