புதன், 9 ஜூலை, 2014

புதிய ரேஷன் கார்டுகளுக்கு உள்தாள் ... : பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் அவதி


கடலூர்: கடலூர் மாவட்டத்தில் புதியதாக வழங்கப்பட்ட ரேஷன் கார்டுகளுக்கு உள்தாள் வழங்காததால், பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
அத்தியாவசிய பொருட் களான அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணை உள்ளிட்ட பொருட்களை மானிய விலையில் ரேஷன் கார்டு மூலமே வழங்கப்படுகிறது. தற்போது அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும், ரேஷன் கார்டு அடிப்படையில் வழங்குவதாலும், பல்வேறு சான்றுகள் பெற ரேஷன்கார்டு முக்கிய ஆவணமாக கேட்பதாலும் அதன் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.
சமையல் காஸ் இணைப்பு, ரேஷன் கார்டிற்கு ஒன்று வழங்கப்படுகிறது. இதனால், கூட்டுக் குடும்பத்தில் வசிப்பவர்களுக்கு, அரசு வழங்கும் மானிய விலையிலான காஸ் போதுமானதாக இல்லை. இதனால் பற்றாக்குறையை போக்குவதற்கு கூட்டு குடும்பமாக இருப்பவர்கள், தனிக் குடும்பமாக பிரிந்து ரேஷன் கார்டை பிரித்துக் கொண்டு வருகின்றனர்.
கடந்த 2005ம் ஆண்டு கொடுக்கப்பட்ட ரேஷன் கார்டு மீண்டும் புதியதாக வழங்கவில்லை. ஆனால் அவற்றிக்கு உள்தாள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் புதியதாக வழங்கப்பட்டு வரும் ரேஷன் கார்டிற்கு உள்தாள் சரி வர வழங்கப்படவில்லை. மாவட்டத்தில் மொத்தம் 7 லட்சம் ரேஷன் கார்டுகள் நடைமுறையில் உள்ளன. இவைதவிர புதிய ரேஷன் கார்டு கேட்டு நாளொன்றுக்கு ஒவ்வொரு தாலுகாவிலும் 10 மனுக்கள் வீதம் வருகின்றன.
மாவட்டம் முழுவதும் 70 மனுக்கள் சேகரிக்கப்படுகின்றன. இவற்றில் தகுதியான விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு ஏற்கனவே புதிதாக வழங்கப்பட்ட 9,000 ரேஷன் கார்டுகளுக்கு உள்தாள் வழங்கப்படவில்லை. சென்னையில் இருந்து வந்த உள்தாள் போதியளவு வழங்கப்படதாததால் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் தற்போது உள்தாள் கேட்டு தாலுகா அலுவலகங்களுக்க நடையாய் நடந்துகொண்டுள்ளனர்.
மாவட்ட நிர்வாகம், ரேஷன் கார்டில் உள்ள வரிசை எண்ணுடன் அச்சடித்து உள்தாள் தேவை என தமிழக அரசுக்கு பைல் அனுப்பியதோடு சரி. மீண்டும் எப்போது உள்தாள் கிடைக்கும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இது குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் கல்யாணம் கூறுகையில், புதியதாக வழங்கிய 7,000 ரேஷன் கார்டுகளுக்கு உள்தாள் வழங்க வேண்டும். அதற்காக நாங்கள் 9,000 கார்டுகளுக்கு உள்தாள் கேட்டுள்ளோம். வரிசை எண் படி உள்தாள் அச்சடித்து வந்ததும், மக்களுக்க வினியோகம் செய்யப்படும் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக