கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களில் புதன்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது. 320 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் 42 வாகனங்களுக்கான தகுதிச் சான்று ரத்து செய்யப்பட்டது.சென்னை போக்குவரத்து ஆணையரின் உத்தரவின்படியும், கடலூர் மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின் பேரிலும் கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள 700 தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது.
இதில், கடலூர் வட்டாரத்துக்கு உள்பட்ட பள்ளி வாகனங்களுக்கு கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்திலும், பண்ருட்டி பகுதியில் அண்ணா பல்கலைக்கழகம் அருகேயுள்ள மைதானத்திலும், குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு வடலூர் வள்ளலார் சபை மைதானத்திலும், சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள வாகனங்களுக்கு சிதம்பரம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி மைதானத்திலும், திட்டக்குடி மற்றும் வேப்பூர் பகுதியில் உள்ள பள்ளி வாகனங்களுக்கு விருத்தாசலம் அரசு பெண்கள் பள்ளிக்கு அருகிலும், நெய்வேலி நகரப் பகுதிக்கு உள்பட்ட பள்ளி வாகனங்களுக்கு நெய்வேலி புனித அந்தோணியர் மெட்ரிக் பள்ளி மைதானத்திலும் ஆய்வு நடைபெற்றது.
மாவட்டத்திலுள்ள மொத்தம் 700 வாகனங்களில் 320 வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில், வாகனங்களின் ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டன, வாகனத்தில் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு உபகரணங்கள், முதலுதவிப் பெட்டி, அவசர வழி, குழந்தைகளுக்கான படிக்கட்டுகள் முதலியவை உள்ளதா என ஆய்வு செய்தனர். ஆய்வின் நிறைவில், 42 வாகனங்களுக்கு மாணவர்களை ஏற்றிச் செல்ல தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டது.
மேலும், 182 ஓட்டுநர்களுக்கு நடத்தப்பட்ட கண் பரிசோதனையில், 47 ஓட்டுநர்கள் கண்ணாடி அணிய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மீதமுள்ள வாகனங்களுக்கான ஆய்வு தொடரும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அங்கமுத்து தெரிவித்தார்.
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அங்கமுத்து தலைமையில், உதவி ஆட்சியர் டாக்டர் ஷர்மிளா வாகனங்களை ஆய்வு செய்தார்.
காவல் துணைக் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி, வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர்கள் ஜெயசங்கர், சரவணன் மற்றும் உதவியாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிதம்பரம் ஆக்ஸ்போர்டு பள்ளி வளாகத்தில் சிதம்பரம் உதவிஆட்சியர் எம்.அரவிந்த், டிஎஸ்பி ஆர்.ராஜாராம் ஆகியோர் முன்னிலையில் வட்டார போக்குவரத்து துறை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கே.சத்தியக்குமார், கே.ராமச்சந்திரன் ஆகியோர் வாகனங்களில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கே.மோகன் (புவனகிரி), எஸ்.ஜெயக்குமார் ஜான்சன் (கீரப்பாளையம்), என்.குமார் (பரங்கிப்பேட்டை) ஆகியோர் உடனிருந்தனர்.
பண்ருட்டி
பண்ருட்டி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற ஆய்வில், பண்ருட்டி வட்டாரத்தில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களை, வட்டார போக்குவரத்து அதிகாரி அங்கமுத்து, பண்ருட்டி காவல் துறை துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக