திங்கள், 28 ஏப்ரல், 2014

மலடாகி வரும் மண்வளத்தை பாதுகாத்திட பிளாஸ்டிக் உபயோகம் தடுக்கப்படுமா?

கடலூர் : மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். தமிழகம் முழுவதும் பல ஆண்டுகளுக்கு முன் உள்ளாட்சிகளில் சேரும் குப்பை மக்கி உரமானது. இதை விவசாயிகள் போட்டிப் போட்டுக் கொண்டு விலை கொடுத்து வாங்கி சென்றனர். இதனால் உள்ளாட்சிகளுக்கு வருமானம் வந்தது. நாளடைவில் பிளாஸ்டிக் பைகள் உபயோகம் அதிகமானது. இதனால் உள்ளாட்சிகளில் சேரும் குப்பை மக்காமல் மலை போல் குவிந்தது. குப்பை கொட்ட புதிய இடங்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பதோடு, நிலம் தண்ணீரை உறிஞ்சும் தன்மை குறைந்து வருவதால் மண் மலடாகும் நிலை உருவாகி வருகிறது.
இதனை உணர்ந்தே முன்பு கலெக்டராக இருந்த ராஜேந்திர ரத்னூ மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடைவிதித்து உத்தரவிட்டார். அதனையொட்டி பிளாஸ்டிக் பைகளை உபயோகித்தால் அபராதம் விதிக்க உள்ளாட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் 90 சதவீதம் பிளாஸ்டிக் பைகள் ஒழிந்தது.
இந்நிலையில் ராஜேந்திர ரத்னூ மாற்றம் செய்தவுடன் மீண்டும் பிளாாஸ்டிக் பைகள் தாராளமாக பயன்படுத்த துவங்கிவிட்டனர். இதனால் உள்ளாட்சிகளில் குப்பை பிரச்னை பெரிதாக உள்ளது. கழிவுநீர் கால்வாய்களில் பிளாஸ்டிக் பைகள் அடைத்து கொள்வதால் எங்கு பார்த்தாலும் கழிவு நீர் தேங்கி நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர். வருங்கால சந்ததியினரையும், மண் வளத்தையும் பாதுகாக்க பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக