செவ்வாய், 18 மார்ச், 2014

சிதம்பரத்தில் பாமக-விடுதலைச் சிறுத்தைகள் இடையேதான் போட்டி?

சிதம்பரம் :சிதம்பரம் தொகுதியில் , திமுக கூட்டணி சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன், பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் அதிமுக வேட்பாளராக சந்திர காசி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப் பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி சார்பில் வாசன் ஆதரவாளரான மணிரத்னமும், ப.சிதம்பரத்தின் ஆதரவாளரான வள்ளல் பெருமானும் சிதம்பரத்துக்கு சீட் கேட்டு மல்லுக் கட்டிவருகின்றனர். எனவே இவர்களில் ஒருவருக்கு சீட் கிடைப்பது உறுதி.
எனவே சிதம்பரத்தை பொறுத்தமட்டில் 4 முனைப் போட்டி உறுதியா கிவிட்ட நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கும், பாமக வேட்பாளர் கோபாலகிருஷ் ணனுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி இருக்கும் எனக் கருதப்படுகிறது.
சமுதாய ரீதியான பிரச்சினை
சிதம்பரம் தொகுதி வாக்காளர் கள், இத்தேர்தலை இரு சமுதாயத் தினருக்கு இடையே நடைபெறும் தேர்தலாகத்தான் கருதுகிறார்களே தவிர அரசியல் கட்சிகளுக்கு இடையேயான தேர்தலாக பார்க்கவில்லை. இதற்குக் காரணம் சமுதாய ரீதியாக இரு கட்சிகளுக்கும் இடையே நிலவிவரும் பிரச்சினைகள்தான் அடிப்படைக் காரணம்.
பாமக நிறுவனர் உட்பட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலரும் சமுதாய உணர்வு தொடர்பான பிரச்சாரங்களும், அதற்கேற்ற வகையில் விடுதலைச் சிறுத்தைகள் மேற்கொள்ளும் பதில் தாக்குதல்களும் சாதிய பிரச்சினைகளை கொழுந்துவிட்டு எரியச் செய்துள்ளன. இதனால் இரு சமுதாயத்தினரிடமும் ஏற்பட்ட பாதிப்புகள் சுவடுகளாக மாற்றப்பட்டுவிட்டன. இரு கட்சியி னரும் தங்களது பலத்தை நிரூபிக்க அவ்வப்போது கட்சி கொடிக் கம்பங்களை வெட்டுவதும், அதற்காக போராட்டங்களை நடத்தி வந்ததும் கடந்த காலங்களில் நடந்த கசப்பான சம்பவங்களே உதாரணமாகும்.
விட்டுக் கொடுக்காத பாமக
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில், குன்னம், ஜெயங்கொண்டம், அரியலூர் உள்ளிட்ட 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இத் தொகுதிகளில் பெரும்பான்மை சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் வன்னியர்கள். இதை உணர்ந்த பாமக சிதம்பரத்தை விட்டுக்கொடுக்க மறுத்துவிட்டது.
மேலும் அதிமுக சார்பில் களமிறங்கியுள்ள சந்திரகாசி மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் மணிரத்னமோ அல்லது வள்ளல்பெருமானோ போட்டியிடும் பட்சத்தில் தாழ்த்தப் பட்டோரின் வாக்குகள் சிதறும் வாய்ப்புள்ளதாகக் கருதும் பாமக, திருமாவளவனுக்கு எதிரான திமுகவின் போக்கையும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும் எனக் கருதுகிறது. அதற்குக் கைமாறாக கடலூர் தொகுதியில் திமுக வேட்பாளரை, பாமகவினர் ஆதரித்தாலும் ஆச்சர்யப் படுவதிற்கில்லை என்கின்றனர் பாமகவின் முன்னணி நிர்வாகிகள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக