திங்கள், 24 பிப்ரவரி, 2014

பரங்கிப்பேட்டையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி போலீசார் விசாரணை

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் பூட்டை உடைத்து மர்ம மனிதர்கள் கொள்ளையடிக்க முயன்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை கச்சேரி தெருவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் விவசாய கடன், நகைக்கடன் என பல்வேறு வங்கி அலுவல்கள் நடைபெற்று வருகிறது. தினமும், வங்கிக்கு ஏராளமான விவசாயிகள் வந்து செல்வார்கள்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் யாரே மர்ம மனிதர்கள் சிலர் வங்கியை கொள்ளையடிக்க திட்டமிட்டு, வங்கி கதவின் பூட்டை உடைத்துக் கொண்டிருந்தனர். அப்போது, பூட்டு உடைக்கும் சத்தத்தை கேட்ட அப்பகுதியைச் சேர்ந்த சிலர் திருடன், திருடன் என கூச்சலிட்டனர். இதில், பொதுமக்கள் ஒன்று திரண்டு மர்ம மனிதர்களை பிடிக்க முயன்றனர்.
ஆனால், இதில் சுதாரித்து கொண்ட மர்ம மனிதர்கள் கண் இமைக்கும் நேரத்தில் பொது மக்கள் கண்ணில் தட்டுப்படாமல் தப்பி ஓடினர். பின்னர், இது பற்றி அப்பகுதி மக்கள் பரங்கிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் லாமேக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பல லட்சம் மதிப்பிலான நகை, பணம் இருக்கும் வங்கியில் இரவு பாதுகாவலர் பணியில் இல்லை என்றும், இதையறிந்த மர்ம கும்பல் வங்கியை கொள்ளையடிக்க முயன்றதும் தெரிய வந்தது. மேலும், பூட்டு உடைக்கும் நேரத்தில் பொது மக்கள் திரண்டு மர்ம மனிதர்களை பிடிக்க முயன்றதால் வங்கியில் இருந்த பல லட்சம் மதிப்பிலான நகை, பணம் தப்பியது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக