பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அன்னங்கோவிலில் ரூ.10 கோடியில் தூர்வாரப்பட்ட வெள்ளாற்று முகத்துவாரம், மீண்டும் தூர்ந்து போனதால் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் மீனவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் கடலோரப்பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் வசிக்கும் மீனவர்கள் தங்களது படகுகள் மூலம் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு அன்னங்கோவில் வெள்ளாற்று முகத்துவாரம் தூர்ந்து போனதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், பரங்கிப்பேட்டை சுற்று வட்டார மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்களின் நலன் கருதி தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அன்னங்கோவில் வெள்ளாற்று முகத்துவாரத்தை தூர்வாரும் பணி நடந்தது. கடந்த 6 மாதத்திற்கு முன்பு இந்த பணி நிறைவடைந்ததையடுத்து பரங்கிப்பேட்டை பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் தங்களது படகுகள் மூலம் அன்னங்கோவில் வெள்ளாற்று முகத்துவாரம் வழியாக கடலுக்கு சென்று மீன் பிடித்து விற்பனை செய்து வந்தனர்.
முகத்துவாரம் தூர்வாரும் பணி முறையாக நடைபெறாததால் கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் வெள்ளாற்று முகத்துவாரம் தூர்ந்து போனது. இதனால், பரங்கிப்பேட்டை பகுதிகளில் உள்ள பெரிய விசைப்படகுகள் வெள்ளாற்றில் இருந்து முகத்துவாரம் வழியாக கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியவில்லை. அப்படியே சென்றாலும் படகுகள் சேதமடையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் 100-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் தங்களது படகுகளை அந்தந்த பகுதி கடலோரத்தில் நிறுத்தி வைக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக