டெல்லி :ஏ.டி.எம். மைய சேவைக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் ரிசர்வ் வங்கியின் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.பொதுமக்கள் தற்போது தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏ.டி.எம். மையங்களில் கட்டணமின்றி எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்க முடியும். கணக்கில் பணம் இருப்பு (பேலன்ஸ்), சேமிப்பு-பணம் எடுப்பு கணக்கு விவரம் (மினி ஸ்டேட்மெண்ட்) உள்ளிட்ட இதர சேவைகளைப் பெறவும் முடியும்.
பிற வங்கி ஏ.டி.எம். மையங்களைப் பொறுத்தமட்டில், மாதத்துக்கு 5 முறை மட்டுமே பணம் எடுப்பது உள்ளிட்ட சேவைகளை கட்டணமின்றி இலவசமாக பெற முடியும்.
இந்த நிலையில், சமீபத்தில் பெங்களூரில் ஏ.டி.எம். மையம் ஒன்றில் பணம் எடுக்க வந்த பெண் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் 24 மணி நேரமும் பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும் என்று வங்கி நிர்வாகங்களை பல்வேறு மாநில அரசுகளும் வலியுறுத்தி வருகின்றன.
ஏ.டி.எம். மையங்களில் இப்படி 24 மணி நேர பாதுகாவலர்களை நியமித்து, ரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதற்கு வங்கிகளுக்கு ரூ.40 ஆயிரம் கோடி செலவு பிடிக்கும் என இந்திய வங்கிகள் சங்கம் கணக்கிட்டுள்ளது.
இந்தச் செலவை ஈடுகட்டுகிற வகையில், எந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்தாலும், மாதம் ஒன்றுக்கு 5 முறைக்கு மேல் பணம் எடுக்கிறபோது அல்லது பிற சேவைகளைப் பெறுகிறபோது, ஒவ்வொரு முறையும் கட்டணமாக ரூ.20 நிர்ணயிக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கியிடம் இந்திய வங்கிகள் சங்கம் கோரி உள்ளது.
ஏ.டி.எம். மையங்களில் மாதத்துக்கு 5 முறை மட்டுமே இலவச சேவை என்பது வாடிக்கையாளர் கணக்கு வைத்துள்ள வங்கி ஏ.டி.எம். மையங்களையும் சேர்த்துத்தான். இது பல்வேறு விமர்சனங்களை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, ஏ.டி.எம். மையங்கள் மூலம் ஏற்படுகிற இழப்பு மிகவும் கவலை அளிக்கிறது. ஏ.டி.எம். சேவை மையங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் அதைச் செய்ய தயாராகவும் இருக்கிறேன். ஆனால் இதை நான் எப்படி தாக்குப்பிடிப்பது என்பதையும் விளக்க வேண்டி இருக்கிறது.
ஏ.டி.எம். மையங்களுக்கு எப்போதும் பாரத ஸ்டேட் வங்கி மானியம் வழங்கிக்கொண்டிருக்க முடியாது.
என்னைப் பொறுத்தமட்டில் கணக்கு வைத்துள்ள வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்தாலும், அதற்கு கட்டணம் நிர்ணயிக்கும் யோசனையை ஆதரிக்கிறேன்.
நாங்கள் எந்தவொரு பணியைச் செய்தாலும் இறுதியாக அதில் வென்றாக வேண்டிய நிலைமை. ஏ.டி.எம். சேவையை அதிகரிக்க வேண்டும், இன்னும் அதிகமான மக்களுக்கு இந்த சேவையை வழங்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறபோது, அதை வணிக ரீதியிலும் நிலைத்து நிற்கத்தக்கதாக அமைக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஏ.டி.எம். மையங்களால் ஏற்படும் இழப்பை சந்திக்க முடியாது என்று அவர் கூறினார்.
இதற்கிடையே எந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்தாலும், மாதம் ஒன்றுக்கு 5 முறைக்கு மேல் பணம் எடுக்கிறபோது அல்லது இதர சேவைகளைப் பெறுகிறபோது அதற்கு கட்டணம் நிர்ணயிக்க அனுமதிக்க வேண்டும் என்ற இந்திய வங்கிகள் சங்கத்தின் கோரிக்கையை பாரத ரிசர்வ் வங்கி பரிசீலிப்பதாக கூறி உள்ளது.
இது தொடர்பாக அந்த வங்கியின் துணை கவர்னர் எச்.ஆர். கான் கூறுகையில், "இந்திய வங்கிகள் சங்கத்தின் கோரிக்கையை நாங்கள் பரிசீலிப்போம். மேலும் பல யோசனைகள் வந்துள்ளன. மக்கள் ஏராளமான பணத்தை பயன்படுத்துகிறார்கள். அதனால் செலவு நிறைய ஏற்படுகிறது. இந்த எல்லா பிரச்சினைகளையும் நாங்கள் பரிசீலிப்போம்" என்றார்.
இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளுக்கு 72 ஆயிரத்து 340 கிளைகள் உள்ளன. அவற்றில் கடந்த மார்ச் மாத நிலவரப்படி வங்கிக்கிளைகளுடனே 37 ஆயிரத்து 672 ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. பாரத ரிசர்வ் வங்கிக்கு செப்டம்பர் மாத நிலவரப்படி 32 ஆயிரத்து 777 ஏ.டி.எம். மையங்கள் உள்ளன.
வரும் மார்ச் 31-ந்தேதிக்குள் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகள் அனைத்தும் தங்களது கிளைகளுடனே ஏ.டி.எம். மையங்களை அமைக்க வேண்டும் என்று மத்திய நிதித்துறை அமைச்சகம் கட்டாயம் ஆக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக