கடலூர்:தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் கடலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:–தமிழகத்தில் இருந்து 300–க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை மத்திய அரசு விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுமட்டுமின்றி வருங்காலங்களில் தமிழக மீனவர்களை இலங்கை அரசு சிறைபிடிக்காத அளவுக்கு தமிழக அரசு மற்றும் கடலோர காவல்படையினர் மீனவர்களுக்கு அறணாக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கப்பட்டு இறந்துள்ளது. இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் கரும்பு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம், நெல் குவிண்டாலுக்கு ரூ. 3 ஆயிரம் அரசு வழங்க வேண்டும். முந்திரி விவசாயிகளுக்கு முந்திரி விலையை நிர்ணயிக்க வேண்டும்.
கச்ச தீவை மீட்க தமிழக அரசு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் மத்திய அரசு இலங்கை அரசுக்கு கச்சதீவு சொந்தம் என அபிடாவிட் தாக்கல் செய்துள்ளனர். இதனை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். கேரளா மாநிலத்தில் சிறுபான்மை தமிழர்களை வெளியேற்றுகிறார்கள். இதற்கு தமிழக அரசும், கேரளா அரசும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக வாழ்வுரிமை கட்சி காங்கிரஸ், பா.ம.க. இடம்பெறும் கட்சியுடன் கூட்டணி வைக்காது. மேலும் எங்கள் கட்சியினர் கடலூர், சிதம்பரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய 10 தொகுதிகளை முதல் தகுதிகளாக தேர்வு செய்து பாராளுமன்ற தேர்தலில் தீவிர களப்பணியாற்றி வருகிறார்கள்.
2–ம் தகுதிகளாக திருவண்ணாமலை, அரக்கோணம், காஞ்சிபுரம், ஆரணி, ஸ்ரீபெரும்புத்தூர் ஆகிய தொகுதிகளை தேர்வு செய்து தேர்தல் பணிகள் செய்து வருகிறோம். மேலும் தமிழகத்தில் ரூ. 7½ லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இதுமட்டுமின்றி ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் 250 கட்சி உறுப்பினர்கள் நியமனம் செய்துள்ளோம். இவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களிடையே ஓட்டு கேட்டால் கணிசமான ஓட்டுகளை பெற முடியும்.
பா.ம.க.வில் நான் இருந்தபோது தலைமை சொன்னதால் விஜயகாந்தை விமர்சனம் செய்தேன். ஆனால் இப்போது விமர்சிக்க மாட்டேன். எங்கள் கட்சியை மதிக்கிற கட்சியுடன் கூட்டணி வைப்போம். ஆம் ஆத்மி கட்சி எங்கள் கட்சிக்கு அழைப்பு விடுத்தது. இதில் நாடாளுமன்ற தேர்தலை ஒன்று சேர்ந்து சந்திக்கலாம் என அழைத்தார்கள். ஆனால் இதற்கு வருங்காலங்களில் பார்த்துகொள்ளலாம் என கூறியுள்ளோம்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தேர்தலில் தனியாக நிற்காது. சேலத்தில் வருகிற பிப்ரவரி 23–ந் தேதி 3–ம் ஆண்டு கட்சி தொடக்க விழாவையொட்டி மாநாடு நடக்கிறது. அப்போது யாருடன் கூட்டணி, தேர்தல் வேட்பாளர்கள் யார்? என்று அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக